Gaza Netanyahu: “காசாவில் போர் ஓயாது“; திடீரென பல்டி அடித்த நெதன்யாகு - அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா.?
காசாவில் இப்போதைக்கு போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஒரு காரணத்தை வைத்து தான் அவர் அப்படி கூறியுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு போர்நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்வது அவசியம் என்றும், ஹமாஸ் ஆயுதங்களை களைந்து, பாலஸ்தீனப் பகுதி ராணுவமயமாக்கப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
காசாவில் நடப்பது என்ன.?
காசாவில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின்படி, தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. காசா மக்களை கொல்வதை ஹமாஸ் நிறுத்தாவிட்டால், காசாவிற்குள் சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று சமீபத்தில் ட்ரம்பும் பயங்கரமான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவ்வாறு நடைபெறும் தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேதன்யாகு கூறியது என்ன.?
இந்த நிலையில்தான், ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை, காசாவில் போர் முடிவடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதே நோக்கமாக கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இது வெற்றிகரமாக முடிந்ததும் போர் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இதுவரை உயிருடன் உள்ள பிணைக் கைதிகள் 20 பேரை விடுவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில், 135 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு, நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸிடமிருந்து 2 பணயக் கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கக் குழு பெற்று, காசாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளிடம் ஒப்படைத்ததாகவும், அங்கிருந்து அவர்கள் அடையாளம் காண இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
காசாவில் இன்னும் இறந்த பணயக் கைதிகள் பற்றிய பிரச்னை, போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய சிக்கலாக மாறியுள்ளது. ரஃபா கடவை மூடுவதால் "உடல்களை மீட்டெடுப்பதிலும் மாற்றுவதிலும் குறிப்பிடத்தக்க தாமதங்கள்" ஏற்படும் என்று ஹமாஸ் சனிக்கிழமை இரவு எச்சரித்தது. இஸ்ரேல், ரஃபா கடவையை மீண்டும் திறப்பதற்கும், பணயக் கைதிகளின் எச்சங்களை மீட்டெடுப்பதற்கும் இடையே தொடர்புபடுத்தியுள்ளது. இதனால், காசாவில் மீண்டும் சிக்கலான நிலை உருவாகியுள்ளது.





















