India-Canada: ”கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள்" - வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
India-Canada: கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா-கனடா:
இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது, கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தான் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதாவது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கன்டனமும் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது.
வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்:
Advisory for Indian Nationals and Indian Students in Canada:https://t.co/zboZDH83iw pic.twitter.com/7YjzKbZBIK
— Arindam Bagchi (@MEAIndia) September 20, 2023
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீப காலமாக இந்தியாவிற்கு எதிரான செயல்கள், குற்றங்கள், கிரிமினல் வன்முறைகள் கனடாவில் அதிகரித்து வருகிறது. இதனால் கனடாவிற்கு செல்ல உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய சமுதாயத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, கனடாவில் உள்ள இந்தியர்கள் அச்சுறுத்தல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நமது தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள்.
மேலும், கனடாவில் உள்ள மாணவர்கள் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். இந்தியர்கள் மற்றும் மாணவர்கள், ஒட்டாவில் உள்ள இந்திய தூதரகத்திலோ அல்லது டொரான்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்களிலோ தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, https://madad.gov.in/AppConsular/welcomeLink என்ற இணையத்திலும் தங்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், அவசர காலங்களில் தூதரக அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ளவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.