Srilanka: இலங்கை அதிபர் மாளிகையில் கோடி கணக்கில் சிக்கிய பணம்! போராட்டக்காரர்கள் சொன்ன திடுக் தகவல்!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து கோடிக்கணக்கான பணத்தை எடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பணத்தை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எடுக்கப்பட்ட பணம் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெய்லி மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உரிய ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்திய கொழும்பின் உயர்பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள ராஜபக்சவின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டாக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குள் நுழைந்த மற்றுமொரு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
இலங்கை சபாநாயகர் வீட்டில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். அதில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளதாக எம்பி ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், பெரும்பான்மை தலைவர்களின் கோரிக்கையின்படி பதவி விலக பிரதமர் மற்றும் அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுத முடிவு செய்துள்ளார். முன்னதாக, அரசியலமைப்பின்படி தற்காலிக அதிபராக சபாநாயகரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து கட்சி அரசை அமைக்க தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இறுதியாக, அதிபரும் பிரதரும் பதவி விலக ஒப்பு கொண்டனர். முன்னதாக, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்திருந்தார். அதிபரின் முடிவு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.
முன்னதாக, உளவுத்துறையிலிருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து ராணுவ தலைமையகத்திற்கு நேற்றிரவு தப்பி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமை போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய காவல்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்