(Source: ECI/ABP News/ABP Majha)
Pakistan President: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியான ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?
பாகிஸ்தான் வரலாற்றில் ராணுவத்தை சேராத ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை.
பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை.
பாகிஸ்தான் அரசியல் சூழல்:
பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர்.
அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றது. மற்ற கட்சிகள் 34 இடங்களில் வெற்றிபெற்றனர். வேட்பாளர் இறந்ததால் ஒரு இடத்தில் தேர்தல் நடத்தபடவில்லை.
புதிய அரசை அமைக்க 133 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தனர்.
பதவிகளை பகிர்ந்து கொண்ட பரம எதிரிகள்:
அதன்படி, பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியான ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பதவி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதில், சமரச உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வாகியுள்ளார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர்தான் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஆரிப் ஆல்வியின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்தாண்டு நிறைவுபெற்றது.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய புதிய எலக்டோரல் காலேஜ் அமைக்கப்படாத காரணத்தால் ஜனாதிபதி பதவியில் ஆரிப் ஆல்வி தொடர்ந்தார். தேர்தல் நடத்தப்பட்டு புதிய எலக்டோரல் காலேஜ் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபராக இருந்து அரசியலில் குதித்தவர் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை, ஜனாதிபதியாக பதவி வகித்தார். 255 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மஹ்மூத் கான் அஷ்காஸ்-க்கு 119 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.