விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு...!
விழுப்புரம் : திண்டிவனத்தில் பாலீஷ்போட்டு தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் நகை அபேஸ்
- நகை கடை உரிமையாளர் கார் தீ வைத்து எரிப்பு:-
விழுப்புரம் அருகே உள்ள சானாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் குமாரசாமி (வயது 39). இவர் விழுப்புரத்தில் நகை தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவர் தன்னுடைய காரை, வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த காரின் 4 டயர்களிலும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்றும் ஏதேனும் முன்விரோதம் காரணமாக தீ வைத்தனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தனியார் நிதி நிறுவனத்தில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி:-
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் 6 மாதம், ஒரு வருடம் என்ற 2 திட்டங்களின் கீழ் ஏலச்சீட்டு நடத்தி வந்தது. அதில் நாங்கள் பலர், உறுப்பினராக சேர்ந்து ஏலச்சீட்டு செலுத்தி வந்தோம். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை ஏலச்சீட்டு கட்டினோம். அந்நிறுவனத்தின் ஊழியர்களே எங்களிடம் நேரடியாக வந்து பணம் வசூலித்து சென்றனர். கடந்த 2 மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் யாரும் எங்களிடம் பணம் வசூலிக்க வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நாங்கள், அந்நிறுவன மேலாளரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே நாங்கள் அந்நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்த்தபோது அந்நிறுவனத்தை காலிசெய்து விட்டு சென்றிருந்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எங்களைப்போன்று 500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ஏலச்சீட்டு பணம் பெற்று பல கோடி வரை அந்நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- போதைப்பொருட்களுக்கு எதிரான 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி:
பள்ளிக்கல்வித்துறைமூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை மனித சங்கிலியாக பிரதான சாலையில் போதைப்பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், உடல்நலக்கேடு, உயிரிழப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் நின்றிருந்தனர். அதனை தொடர்ந்து நான்குமுனை சந்திப்பில் இருந்து அரசு சட்டக்கல்லூரி வரை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் 4 ஆயிரம் பேரும், அரசு சட்டக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பங்கேற்று போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலியாக நின்றனர்.
- விழுப்புரம்: லாரியில் கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்:
கஞ்சனூர் காவல் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீசார் கண்ணாந்தல் கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் லாரியுடன் நின்றிருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேலூர் தென்னமர வீதியை சேர்ந்த மோகன் மகன் குமரேசன்(வயது 27) என்பதும், கண்ணாந்தல் கிராமத்தை சேர்ந்த சகாயம் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- திண்டிவனத்தில் பாலீஷ்போட்டு தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் நகை அபேஸ்
திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகள் பாரதி (வயது 18). கல்லூரி மாணவி. இவர் வீட்டில் படித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், பாரதியிடம், பழைய பாத்திரங்கள், விளக்கு ஏதும் இருந்தால், கொடுங்கள் நாங்கள் பாலீஷ் போட்டு அதனை புதியது போன்று மாற்றி தருகிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து பாரதி வீட்டில் இருந்த பித்தளை விளக்கை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை பாலீஷ் போட்டு கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மர்மநபர்கள், நகை இருந்தால் கொடுங்கள் அதனையும் பாலீஷ் போட்டு தருகிறோம் என பாரதியிடம் கூறியுள்ளனர். அதனை நம்பிய பாரதி, 1¼ பவுன் நகையை அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அதனை பாலீஷ் போடுவது போன்று நடித்த மர்மநபர்கள், அந்த நகையை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்