TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Rain Update: சென்னையில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்கு உள்ளது ஃபெங்கல் புயல்:
மண்டல வானிலை மையம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 320 கி.மீ. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 490 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலையில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடக்கும், காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் வீசும்” என எச்சரித்துள்ளது. இதன் காரணமாக,
எங்கெல்லாம் இன்று கனமழை பொழிய வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
28-11-2024: தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான – கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
28-11-2024 முதல் 29-11-2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
இன்று காலை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

