Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் தரக்குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Paamban Paalam: ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில், பெரும் குறைபாடுகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
”பாம்பன் பாலம் தரமானதாக இல்லை”
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற பாம்பன் பாலம் பழுதடைந்ததால், அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 99 கண்களை உடைய பாம்பன் ரயில்வே பாலத்தை கடந்த நவம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் சவுத்ரி ஆய்வு செய்தார். பாலத்தின் துணை கர்டர்கள், செங்குத்தாக உயரக்கூடிய லிஃப்ட் தண்டவாளம் மற்றும் அகலப்பாதை தண்டவாளம் ஆகியவற்றை 2 நாட்கள் ஆராய்ந்தார். அப்போது, புதிய பாலத்தின் மீது 90 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் பாலம் தரக்குறைவாக கட்டப்பட்டு இருப்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிந்த பிறகும் அதில் ரயில் இயக்க அனுமதி அளித்துள்ளார்.
நிபந்தனைகளுடன் அனுமதி
ஆய்வு தொடர்பாக ஏ.எம். சவுத்ரி சமர்பித்துள்ள அறிக்கையில், “ பாலம் தரக்குறைவாக கட்டுப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். பாலம் கட்டுவதற்கான பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், பாலத்தில் லிஃப்ட் பகுதி வரும்போது மட்டும் 50 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கலாம், மற்ற பகுதிகளில் 75கிமீ வேகத்தில் ரயிலை இயக்கலாம் என்ற நிபந்தனைகளுடன் ரயில் சேவைக்கு அனுமதி தந்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் சிறந்ததாக இருந்ததாகவும் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
The Commissioner of Rail Safety (CRS) has flagged multiple lapses found in the newly built Pamban bridge stating:
— Tamil Nadu Infra (@TamilNaduInfra) November 27, 2024
“This new important bridge has been constructed to replace the existing bridge, opened in the year 1914, which has a double-leaf bascule section with a Scherzer… pic.twitter.com/ETV2H3JQOi
கட்டுமான பணியில் ஏராளமான குளறுபடிகள்
ரயில்வே கட்டுமான பணிக்கு ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்தாக உயரும் தண்டவாளம் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த தரத்திற்கு அமைக்கப்படவில்லை. விசாரணையில் செங்குத்தாக உயரும் தண்டவாள வடிவமைப்புக்கும், தமக்கும் தொடர்பு இல்லை என தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. பாம்பன் பாலத்தின் கட்டுமானத்திற்கு முன் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கும் நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. தாங்கள் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியமே மீறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பாலத்தின் பளுதூக்கும் திறன் 36 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. கட்டுமானத்தில் செய்யப்பட்டுள்ள வெல்டிங் பற்றவைப்பும் உரிய தரத்தில் இல்லை. பாலம் கட்டும் இடத்திற்கு சென்று வெல்டிங் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக் குழு சோதனை செய்யவில்லை. கடலில் பாலம் கட்டப்படுவதால் ஏற்படக்கூடிய அரிப்பு சேதம் குறித்தும் உரிய கவனம் செலுத்தவில்லை. உலகிலேயே அதிக அரிமானம் ஏற்படக் கூடிய 2வது பகுதியாக கருதப்படும் கடல்பகுதியில் அதை கருத்தில் கொண்டு பாம்பன் பாலம் கட்டப்படவில்லை. புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏற்கனவே அரிமானம் ஏற்பட தொடங்கிவிட்டது. அதனை சுட்டிக்காட்டிய பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை” என ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி:
கடலின் நடுவே தூக்கு ரயில்வே பாலம் அமைப்பது இந்திய ரயில்வேயிற்கு இதுவே முதல் அனுபவமாகும். ஆனால், மும்பை ஐஐடி நிபுணர் குழுவை அணுகி அவர்கள் அளித்த வடிவமப்பை ஏற்று புதிய பாலம் கட்டப்பட்டதாக மூத்த ரயில்வே பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் ரயில் இயக்குவதை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பாலத்தின் தரத்தினை முழுமையாக ஆராய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த பாலம் தான், பிரதானமான இணைப்பாகும். அப்படி இருக்கையிலும், பாலத்தின் தரத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.