விழுப்புரம் : ரூ.25.37 கோடி செலவில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது ஏன்?
விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.37 கோடியில் கட்டப்பட்ட அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புதியதாக அணைக்கட்டு கட்ட கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது.
அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு 3 மதகுகள் வீதம் மொத்தம் 6 மதகுகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 215 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மதகுகள் மூலம் வினாடிக்கு 5,105 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு தென்பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும் வகையிலும், அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது. அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வகையில் கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தண்ணீர் வரத்து தொடங்கியது. பலத்த மழையினால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதனை விழுப்புரம் கடலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.
அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. அதாவது எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறியதோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்த சில வாரங்களிலேயே உடைப்பு ஏற்பட்டதால் 2 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அதிருப்தியடைந்தனர். இந்த அணைக்கட்டு உடைந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டை பார்வையிட்ட அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த அணைக்கட்டை சீரமைக்க மேலும் ரூ.7 கோடி கேட்டு அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அதன் பிறகு எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த அணைக்கட்டை சீரமைக்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், அந்த அணைக்கட்டை நேரில் பார்வையிட்டு ரூ.15 கோடியில் அணைக்கட்டை சீரமைப்பதற்காக கோப்புகளை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் இந்த அணைக்கட்டை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படுவதாக இருந்தது. அதற்குள் மழைக்காலம் தொடங்கி ஆற்றில் வெள்ளம் செல்வதால் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை ஆகிய அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் தளவானூர் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது இதனால் அணைக்கட்டு மேலும் சேதமடையாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர், அந்த அணைக்கட்டின் மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். அணைக்கட்டின் வலதுபுற மதகுகள் முற்றிலும் உடைந்துள்ளதால் அங்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி, இடதுபுற மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தளவானூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்துச்சென்றது. ஒவ்வொரு நாளும் அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த சூழலில் கடந்த 9-ந் தேதி அதிகாலை தளவானூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வாறு அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணைக்கட்டின் இடதுபுற கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் அணைக்கட்டின் கரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது. நேரம் செல்ல, செல்ல அணைக்கட்டின் கரைப்பகுதி கான்கிரீட் சுவர்களை வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால் 3 மதகுகளும் அதன் உறுதிதன்மையை இழந்து, ஒரு புறமாக சாய்ந்தது. இந்த 3 மதகுகளும் எந்தநேரத்திலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சூழல் நிலவியது.
அணைக்கட்டு கட்டிய ஓராண்டிலேயே இருபுறமும் உள்ள மதகுகள் உடைந்து சேதமடைந்ததை பார்த்து விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்து மிகவும் கவலையடைந்தனர். இந்த அணைக்கட்டை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதோடு அணைக்கட்டின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்க மணல்மேட்டின் மீது கருங்கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும் அணைக்கட்டுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அணைக்கட்டின் இடதுபுறத்தில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் அருகே உள்ள கரையிலும் நேற்று முன்தினம் காலை அரிப்பு ஏற்பட்டு அவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து கரும்பு பயிர்களை அடித்துச்சென்றது.
இதுபற்றி அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வருவாய் அதிகாரி ராஜசேகரன், கோட்டாட்சியர் அரிதாஸ் ஆகியோர் நேரில் வந்து சேதமடைந்த அணைக்கட்டை பார்வையிட்டனர். அப்போது சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டதாக தகவல் வந்தது. இந்த தண்ணீர் வந்தால், தென்பெண்ணையாற்றின் கரையில் மேலும் உடைப்பு ஏற்பட்டு, தளவானூர் கிராமத்திற்குள் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே சாய்ந்து நிற்கும் 3 மதகுகளையும், அதன் அருகில் உள்ள அணைக்கட்டு பகுதிகளையும் சுமார் 50 அடி நீளத்திற்கு மட்டும் வெடி வைத்து தகர்க்க கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தளவானூர் அணைக்கட்டின் இடதுபுற பகுதியில் உள்ள 3 மதகுகள் மற்றும் கரைப்பகுதியில் உள்ள கான்கிரீட் சுவர் வரை 50 அடி தூரத்துக்கு வெடி வைக்க திட்டமிட்டனர். இதற்காக திண்டிவனம் அருகே எறையூர் கல்குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் அனுபவம் வாய்ந்த 15 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், 3 மதகுகள் மற்றும் கரைப்பகுதி கான்கிரீட் பகுதியில் 100 ஜெலட்டின் குச்சிகள், 200 தோட்டாக்களை 20 இடங்களில் வைத்தனர். இந்த பணி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.
இதனை தொடர்ந்து கலெக்டர் மோகன் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் மாலை 6 மணிக்கு வெடியை வெடிக்க வைத்து, அணைக்கட்டு தகர்க்கப்பட்டது. அப்போது வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அணைக்கட்டு சிறிய, சிறிய துண்டுகளாக 100 மீட்டர் தூரத்திற்கு விழுந்தது. ஆனால் அந்த அணைக்கட்டு முழுமையாக தகர்க்கப்படவில்லை. அணைக்கட்டில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. எனவே இன்று இரண்டவது நாளாக மீண்டும் வெடி வைத்து முழுமையாக தகர்க்கப்பட்டது.