ABP Nadu Impact : விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைக்கப்படாத தடுப்பணைகள் - கலெக்டர் ஆட்சியர் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கை
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டினை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலம் ஊராட்சியில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டினை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950ம் ஆண்டு கட்டப்பட்டது எல்லீஸ் தடுப்பணை. 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த தடுப்பணையாகும். இந்த எல்லீஸ் அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகளும் சென்ற ஆண்டு பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளம் காரணமாக உடைந்தது.
அப்போது தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக வந்ததாலும் தண்ணீர் ஆற்றில் சமநிலையில் செல்லவில்லை. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும் பாதையாகவும் உருவாகி, தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் உடைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இதனால் ஏனாதிமங்கலம் - விழுப்புரம் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து தடுப்பணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் கரைகள் சேதமடையாத வண்ணம் கரைகளை காத்திடும் வகையில் கருங்கற்களை கொண்டு கரைகளை பலப்படுத்திடும் பணியில் ஈடுபட்டனர். தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் கரையோரமாக வருவதால் ஆற்றின் நடுப்பகுதியில் செல்வதற்காக தடுப்பணையின் நடுப்பகுதி கட்டை சிமெண்ட் தூண் ஆகியவற்றை டெட்டனேட்டர் குச்சி வெடிமருந்து வைத்து உடைத்து ஜேசிபி இயந்திரத்தால் அப்புறப்படுத்தினர்.
மேலும், இதே போன்று விழுப்புரத்தை அடுத்த தளவானூர் எனதிரிமங்கலம் இடையே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2019 ஆம் ஆண்டு 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
தடுப்பணை திறக்கப்பட்ட ஒன்றரை மாதத்திலேயே அணையின் நீர் திறப்பு பகுதியான எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள மூன்று மதகுகள் உடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை தடுப்பணையை சீரமைத்தது. இதனிடையே, தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தளவானூர் பகுதியிலிருந்த கரைப்பகுதி மற்றும் மதகுகள் இரண்டாவது முறையாக உடைந்தன. இதனால் வெள்ளநீரானது தளவானூர் ஊருக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டது. கரைப்பகுதியிலுள்ள மதகுகளை வெடி வைத்து தகர்த்தனர்.
இந்நிலையில், தற்போது சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய சேதமடைந்த தடுப்பணையை கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தளவானூர், எல்லிசத்திரம் தடுப்பணைகள் உடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் புதிய அணைக்கட்டை கட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும், தளவானூர் தென்பெண்ணையாற்றுக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இரண்டு தடுப்பணைகளும் மறு சீரமைப்பு செய்யப்படாததால் தளவானூர் மற்றும் எல்லிச்சத்திரத்தை சுற்றி இருக்க கூடிய பத்தாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் பாசன வசதியின்றியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எல்லிச்சத்திரத்திலிருந்து தடுக்கப்படும் நீரானது ஆழங்கால் வாய்க்கால் வழியாக 200க்கும் மேற்பட்ட ஏரிகள் குளங்கள் நிரம்பி வந்தது மூன்று ஆண்டுகளாக ஆற்று நீர் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தென்பெண்ணையாற்றில் சேமிக்கப்படும் நீரால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வந்த நிலையில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயராமலும் ஏரிகள் நிரம்பாமல் வறட்சி காலத்தை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
இந்த நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கால்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கால்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நேரடி வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளின் நீர் இருப்பு பற்றிய விவரம் கேட்டறியப்பட்டது.
மேலும், எல்லீஸ் அணைக்கட்டின் வலது புற வாய்க்கால்களான ரெட்டி வாய்க்கால் மற்றும் எரளுர் வாய்க்கால்களின் ஆற்று நீர் செல்லும் வகையில் வாய்க்கால்களின் தலைப்பு பகுதி தூர்வாரி ஆற்றின் உள்புறம் மண்கரை ஏற்படுத்தி வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டது. தற்போது, எல்லீஸ் அணைக்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பாக்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.