வேலூர் : மாயமானதாக கூறப்பட்ட பரோல் கைதி , சடலமாக கண்டெடுப்பு!
வேல்முருகன் இதுவரையில் , 9 முறை பரோலில் சிறையில் இருந்து வெளியில் சென்றுள்ளார் . இதில் முதல் தடவை மட்டுமே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .
வேலூர் மத்திய சிறையில் இருந்து மூன்று நாட்கள் பரோலில் வந்த கொலைத் தண்டனை கைதி மாயாமாகியுள்ளார் என்று நேற்று சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்த சூழ்நிலையில் , இன்று காலை அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் , பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (27) . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் அவருடைய 19 வது வயதில் , அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை , அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார் .
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பாகாயம் போலீஸார் , பின்பு வேல்முருகன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது மீது கொலைவழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் . பின்பு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேல்முருகன் , கடந்த 2017 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் பெற்று, ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் .
இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்று நாட்கள் பொது விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்த வேல்முருகனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் மாலை வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டது .இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட வேல்முருகன் , திங்கள் மாலை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் . ஆனால் திங்கட்கிழமை இரவு வரை வேல்முருகன் சிறைக்கு திரும்பாததால் , வேலூர் சிறை துறை நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலையில் பாகாயம் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது .
இந்த சூழ்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , இறந்துபோன வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக வேலூர் சிறைத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்ட பொழுது , இறந்துபோன கொலைக்குற்றவாளி வேல்முருகன் இதுவரையில் , 9 முறை பரோலில் சிறையில் இருந்து வெளியில் சென்றுள்ளார் .
இதில் முதல் தடவை மட்டுமே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . மீதமுள்ள 8 முறையும் நன்னடத்தை அடிப்படையில் சொந்த பாதுகாப்பிலே பரோலில் சென்றுள்ளார் . அவரது மரணம் தொடர்பாக , பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு , அவரது மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர் .
பரோலில் சென்று மாயமானதாக கூறப்பட்ட கொலை குற்றவாளியின் உடல் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் , விருபாட்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .