கட்டாயப்படுத்தாதீங்க; அக்னிபத் திட்டத்தை கைவிடுங்க: திருமாவளவன்
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யக்கூடாது. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த திட்டத்தை கட்டாயப்படுத்தக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
லாக்கப் மரணங்கள் தொடர்பாக விசாரணை செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் அவருக்கு மலர் மாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டப்பட்டது. தனக்கு அணிவிக்கப்பட்ட இந்த மலர் கிரீடத்தினை திருமாவளவன் தனது புகைப்பட கலைஞருக்கு அணிவித்து அவரது கேமராவை வாங்கி அவரை புகைப்படம் எடுத்தார்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது… குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சிகள் கூடி கலந்தாய்வு செய்ய உள்ளனர் அந்த கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு வந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை வலியுறுத்தி பேசயிருக்கிறோம். பொது வேட்பாளராக கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டம் நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ளது அதனை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அதனை வரவேற்கிறோம். பிரதமர் அவர்கள் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அக்னி வீரர்களை தேர்வு செய்யக்கூடிய ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது 4 ஆண்டு காலத்திற்கான ஒரு ஒப்பந்த பணி என்பது போல அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பை மத்திய அரசு சந்திக்க நேரிட்டுள்ளது. வட இந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் ரயில் மறியல் வன்முறை என பரவி வருகிறது. அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பெரும்பாலானோர் இந்துக்களே. இந்துக்களுக்கு விரோதமான கட்சி பாஜக. ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யக்கூடாது. அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த திட்டத்தை கட்டாயப்படுத்தக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிக்கிறது. கர்நாடக முதல்வர் அவர்கள் அண்மையில் ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார் அதனை தொடர்ந்து தமிழகத்திலும் நம்முடைய நிலைப்பாட்டை சொல்வதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் புதுடெல்லிக்கு செல்லவிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதில் பங்கேற்க உள்ளது மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்த உள்ளோம்.
லாக்கப் மரணங்களில் சம்மந்தப்பட்டவர்கள் மீது பணியிடை நீக்கம் மட்டும் போதாது. கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். லாக்கப் மரணங்கள் தொடர்பாக விசாரனை செய்ய நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். சாதிய ரீதியான வன்கொடுமைகளை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனி உளவுத்துறையை ஏற்படுத்த வேண்டும். ஒற்றை தலைமை என்பது அதிமுக உட்கட்சி விவகாரம். அதில் விசிக கருத்து சொல்ல முடியாது. பத்து மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்தாண்டு குறைந்துள்ளதற்கு கொரோனா நோய் தொற்றும் ஒரு காரணம்” என்றார்.
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருவது குறித்த கேள்விக்கு “ஊடக விளம்பர மோகத்திற்காக அண்ணாமலை இவ்வாறு செய்து வருகிறார். தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக உள்ள மாவட்டமாக திருவாரூர் இருக்கிறது என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு தீண்டாமை தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தான் அதிகமாக உள்ளது.திருவாரூரிலும் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் தீண்டாமை உள்ளது” என்று கூறினார்.
“பாஜக காங்கிரஸை மனதில் வைத்துக் கொண்டு தனக்கு எதிர்க்கட்சி இல்லை என்று நினைத்துக் கொள்கிறது. பாஜகவிற்கு எதிர்கட்சி மக்கள் தான். உரிய நேரத்தில் மக்கள் பா.ஜ.க விற்கு பாடம் புகட்டுவார்கள்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.