Trichy: கைகாட்டிய தளபதி.. தலையசைத்த விஜய்மக்கள் இயக்கம்.. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இரவு பாடசாலை!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் இரவு பாடசாலை திட்டத்தை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடங்கினர்.
![Trichy: கைகாட்டிய தளபதி.. தலையசைத்த விஜய்மக்கள் இயக்கம்.. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இரவு பாடசாலை! Trichy they started a night school program on behalf of the Vijayamakal movement Trichy: கைகாட்டிய தளபதி.. தலையசைத்த விஜய்மக்கள் இயக்கம்.. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இரவு பாடசாலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/16/56edc800261271295b75499ac5b479ba1689489006174184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு வருவார் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அவ்வப்போது மாவட்ட தலைவர்கள் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இலவச மதிய உணவு, முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் மரியாதை செலுத்துவது, மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது உள்ளிட்ட செயல்பாடுகளால், விஜய் தனது அரசியல் நகர்வை தொடங்கி விட்டார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீப நாட்களாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் எந்த திட்டத்தை தொடங்கினாலும் நடிகர் விஜய், 234 தொகுதிகள்என குறிப்பிட்டு திட்டமிடுவது, ஒருவேளை சட்டப்பேரவை தேர்தலை விஜய் குறிவைத்திருக்கிறாரா? என்ற கேள்வி விவாதத்துக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள் என 234 தொகுதிகளிலும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்தார்.
மேலும் கடந்த மாதம் மாணவ, மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து விழாவை சிறப்பாக நடத்தியதற்காக, நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கல்வி தந்தை, கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, இன்று தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும், அதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக இரவு நேர பாடசாலை திட்டத்தை தொடங்க வேண்டும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அதற்கான இடமும், செலவும் விஜய் மக்கள் இயக்கமே ஏற்கும் எனவும் விஜய் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.
இந்நிலையில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் இரவு பாடசாலை திட்டத்தை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடங்கினர். இதில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் வினோத், நிர்வாகி வெங்கடேஷ் பாபு, கார்த்திக், ஸ்ரீரங்கம் நகர தலைவர் பாண்டு, லோகேஷ் ,விக்னேஷ், விக்கி மற்றும் தொண்டர்கள் அணி என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியது... தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்டு, பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்த அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)