Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..?
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள், பாதுகாவலர் இடையே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளது. போலீஸின் தீவிர விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தெரியவரும்.
![Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..? Trichy Srirangam Ranganathar Temple Attack on Andhra Devotees Know Full Details Here- TNN Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய பக்தர்; அடைக்கப்பட்ட நடை - நடந்தது என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/2839aee30411c16ed7fc40c2a0a5bb501702364392153184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து 2.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முதல் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இன்று காலை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஐயப்ப பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது, ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோயில் செக்யூரிட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் செக்யூரிட்டிகளும், ஐயப்ப பக்தர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சென்னாராவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனை தொடர்ந்து, அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தார். இதைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் கோபம் அடைந்து கூச்சலிட்டனர். அதையடுத்து, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கோயில் செக்யூரிட்டிகள் பரத் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதே போல கோயில் செக்யூரிட்டிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட பெருவிழா திரு நெடுந்தண்டகம் உற்சவத்துடன் இன்று இரவு துவங்கவிருந்த நிலையில் இந்நிகழ்வு அபசகுணமாக கருதப்படுகிறது. அதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் வெவ்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறிய விளக்கம்.. இன்று காலை சுமார் 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில், ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள், உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியைப் பிடித்து, அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். எனவே ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தட்டி கேட்ட காவலரையும் ‘போலீஸ் டவுன் டவுன்' என்று கோஷம் எழுப்பினார்கள். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல், இடையூறு செய்ததால் உடனே காவல்துறையில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா பக்தர்கள் தரப்பில் தெரிவித்த விளக்கம்..
நாங்கள் ஆந்திரா, கர்நாடக ஆகிய பகுதிகளில் இருந்து , 30 க்கும் மேற்பட்டோர் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தோம். அப்போது நீண்ட நேரமாக மக்கள் அனைவரும் வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் கோயில் பாதுகாவலர்கள் ஒரு சில நபர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய தனி வழியே அழைத்து சென்றனர். அதனை நாங்கள் தட்டி கேட்டோம், அப்போது பாதுகாவலர்கள் தகாத வார்த்தையால் மரியாதை இல்லாமல் பேசினார்கள். இதனால் வாக்குவாதம் பெரிய அளவில் ஏற்பட்டு பின்பு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பிடமும் சமரசம் செய்து கொள்ளுமாறும், பிரச்னை எதுவும் வேண்டாம் எனவும் காவல்துறை கடிதம் எழுதி வாங்கி கொண்டதாக தெரியவந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)