திருச்சி : ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 13 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். இவர் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் தற்போது வரை சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை பிடித்து சிறப்பு புலனாய்வுக்குழு தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக எம்.கே.பாலன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி நடைபயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில் அவரை கடத்தி கொலை செய்து எரித்து விட்டது தெரிய வந்தது. இந்த பாலன் கொலை வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலனைப் போன்று ராமஜெயமும் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டதால் அந்தக் கொலையாளிகளுக்கு இதில் சம்பந்தம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் அவரது உதவியாளர்களாக இருந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. ஷகில் அக்தர் திருவெறும்பூர் வருகை தந்தார். பின்னர் பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 13 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், லெப்ட் ரவி ஆகிய 13 ரவுடிகளுக்கு இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து 12 பேர் இன்று காலையிலேயே கோர்ட்டுக்கு வந்தனர். இதில் 13-வது நபரான லெப்ட் ரவி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் 13 ரவுடிகளும் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் விசாரணை அதிகாரியாக இருக்கும் எஸ்.பி., வராத காரணத்தால் மனு மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம் உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிடுமாறு எஸ்.பி. ஜெயக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார் என சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர். அன்று அவர்கள் 13 பேருக்கும் பெங்களூருவில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தகவல் தெரிகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 13 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும் பட்சத்தில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கும். 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.