Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
திருச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கலைப்புலி ராஜா மீது பல வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
24 மணி நேர கண்காணிப்பு:
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை, கொலை, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீஸ்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார்.
இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுபான கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த நவீன் குமாரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் சிலர் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று காலை ஆங்கரை பகுதியைச் சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கலைப்புலி ராஜா திருச்சி அடுத்த சிறுகனூர் காப்பு காடுகளில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து இன்று காலை அங்கு சென்ற போலீசாரை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
சுட்டுப்பிடித்த போலீஸ்:
இதனால் போலீசார் தற்காப்புக்காக அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காயமடைந்த கலைப்புலி ராஜாவை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.- இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட கலைப்புலி ராஜா மீது பல வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.