வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ்: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மக்கள் போராட்டம்
வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடந்தது.
திருச்சி மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட முடுக்குப்பட்டி பகுதியில் பல வருடமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கட்சியின் பொன்மலைப்பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட முடுக்குப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் பாய் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து போராட்ட குழுவினர் கூறும்பொழுது, இந்த விஷயத்தில் முடுக்குப்பட்டி இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தெரியவந்து உள்ளது. எனவே இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எதுவும் கூடாது. 120 குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது. வேறு இடம் கொடுத்தாலும் நாங்கள் அதனை வாங்க மாட்டோம். இந்த விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்று கூறினார்கள். மேலும் இந்த முற்றுகை போராட்டத்தில் முடுக்கு பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டில் இருந்து பாய் மற்றும் பாத்திரங்களை எடுத்து வந்து, ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் விரித்து அதில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க சென்றனர். அங்கு அந்த மனுவை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த முடுக்குப்பட்டி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென ரெயில்வே நிலையத்திற்குள் புகுந்து, முதல் பிளாட்பாரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். வீடுகளை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டதை கண்டித்து ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு முடுக்குப்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்