Trichy: சீரமைக்கப்பட்ட திருச்சி காவிரி பாலம்.. 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு - மக்கள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளமான காவிரி பாலம் சீரமைக்கும் பணிகள் முடிவுற்று இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவிரி பாலம்:
இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015 நவம்பரில் ரூ.1.35 கோடி, 2018 மார்ச்சில் ரூ.35 லட்சம், 2018 செப்டம்பரில் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
சீரமைக்கப்பட்ட பாலம்:
இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி இரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்தது. எனவேதான் இந்தப்பணி அப்போது ஒத்தி வைக்கப்பட்டது என்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, இதனால் காவிரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதி சனிக்கிழமை இரவு 12 மணி முதல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அவ்வபோது மழையின் காரணமாக பணிகள் நடைபெற தாமதமாகியது. அதே நேரத்தில் போக்குவரத்து மாற்றத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் காவேரி பாலம் சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கபட்டதுள்ளது. மேலும் சில காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது, ஆகையால் தான் இத்தகைய தாமதத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் புதியபொழிவுடன் காவிரி பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மத்திய மண்டல காவல் துறை தலைவர் க.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், காவல் துணை ஆணையர் வி.அன்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் த.இராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.கேசவன், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, உதவி பொறியாளர் கண்ணன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.