தடம் புரண்டால்... ரயிலை கவுத்துப்போட்டு ஒத்திகை பார்த்த அதிகாரிகள்! திருச்சியில் சுவாரஸ்யம்
ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக பயணிகளை மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி ரயில்வே குட்ஷெட் யார்டு நடைபெற்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை நம்பியே இருக்கிறார்கள்.
குறிப்பாக ரயிலில் பயணம் செய்தால் பாதுகாப்பாகவும் குறிப்பிட்ட நேரத்தில் சென்று அடையலாம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.
மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் ரயில் சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. குறிப்பாக மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், பயணிகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துதல், தண்டவாளங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக மேற்கொள்வதால், தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களும் பல இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு..
இந்தியாவைப் பொறுத்தவரை ரயில் சேவை என்பது இன்றியமையாதது என்றாலும் ஆண்டுதோறும் ஒரு சில இடங்களில் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
ரயில் விபத்துக்கள் ஏற்படும் போது மீட்பு பணிகளில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆகையால் அவற்றை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களால் பல உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரயில்களை பராமரிக்கவும் தண்டவாளங்களை சீரமைத்து பாதுகாப்பான முறையில் ரயில் சேவையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
குறிப்பாக மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காகவும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சியில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் - மீட்பு பணியில் அதிகாரிகள்..
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம், தேசிய பேரிடர் பாதுகாப்பு படை (என்டிஎப்ஆர்) ஆகியவை சார்பில் திருச்சி குட்ஸ் யார்டில் ரயில் விபத்து, மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். என்டிஆர்எப் உதவி கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் இதில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஒத்திகையின் போது விபத்து நடந்தவுடன் அபாய ஒலி ஒலிப்பது, உரிய பேரிடர் குழுக்களுக்கு தகவல் அளிப்பது, விபத்து நடைபெற்ற இடத்துக்கு ஆம்புலன்சுடன் மருத்துவக் குழுவினர் வருவது, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக்கொண்டோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகளை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.