மேலும் அறிய
பெரம்பலூரில் தீரன் பட பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்.. பொதுமக்கள் அச்சம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள் எலக்ட்ரீசியனை தாக்கி, அவரது மகளிடம் நகைகளை பறித்து சென்றதோடு, மிரட்டி கார் சாவியை வாங்கிக்கொண்டு அதில் ஏறி தப்பி சென்றனர்.
முகமூடி கொள்ளையர்கள் எலக்ட்ரீசியன் வீட்டில் கொள்ளை
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் நெடுஞ்சாலை அம்மாபாளையம் பிரதான சாலையை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 58). எலக்ட்ரீசியன். இவருக்கு ராஜலட்சுமி (49) என்ற மனைவியும், ரம்யா (32) என்ற மகளும், விக்னேஷ் (27) என்ற மகனும் உள்ளனர். சிவில் என்ஜினீயரான விக்னேஷ் சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ரம்யாவுக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி பிரகதி(9) என்ற மகள் உள்ளார். சரவணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் ரம்யா தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ரம்யா பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பிரகதி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாண்டியன் குடும்பத்தினர் வழக்கம்போல் வீட்டின் கதவை அடைத்து விட்டு உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு தூங்க சென்றனர். தற்போது கோடை காலம் என்பதால் காற்றோட்டத்துக்காக பாண்டியனின் மனைவி, மகள், பேத்தி ஆகியோர் வீட்டின் மொட்டை மாடிக்கு தூங்க சென்றனர். மாடிக்கு செல்லும் படிக்கட்டு வீட்டினுள்ளே உள்ளது. பாண்டியன் வீட்டில் ஒரு அறையில் தூங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென்று பாண்டியன் வீட்டின் கதவின் உள்தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, வீட்டினுள் 5 கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் முகத்தில் முகமூடியும், கையில் கையுறைகளையும் அணிந்திருந்தனர். தூங்கி கொண்டிருந்த பாண்டியனை கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் முதுகில் அடித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் தூக்கத்தில் இருந்து எழுந்த பாண்டியன் திருடன், திருடன் என்று சத்தமிட தொடங்கினார். இதனால் கோபடைந்த கொள்ளையர்கள் பாண்டியன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம்-நகை எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அவர் வீட்டில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். தந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு மொட்டை மாடியில் இருந்து எழுந்து வீட்டிற்குள் வந்த ரம்யாவிடம் இருந்து கொள்ளையர்கள் 3 பவுன் தாலி சங்கிலி, ¾ பவுன் எடையுள்ள 2 மோதிரங்களை பறித்ததோடு மட்டுமின்றி, கார் சாவியையும் கேட்டு வாங்கினர். பின்னர் கொள்ளையர்கள் வீட்டின் கதவை அடைத்து வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பாண்டியனின் காரை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து ரம்யா உடனடியாக செல்போன் மூலம் பெரம்பலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் பாண்டியன் வீட்டிற்கு விரைந்து சென்று கதவை திறந்து விட்டனர். பின்னர் காவல்துறையினர் பாண்டியன் குடும்பத்தினருடன் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காயமடைந்த பாண்டியன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion