Seeman about Freebies: பி.டி.ஆர். தியாகராஜன் மனசாட்சியுடன் பேசவேண்டும்... திருச்சியில் சீமான் பேட்டி!
இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், ம.தி.மு.கவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6இல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்.
இந்த வழக்கில் மீண்டும் நாளை செப்டம்பர் 19ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல இச்சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க வினர் கொடுத்த வழக்கில் வரும் 25ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் பேசியதாவது:
”இலவசங்கள் கூடாது என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதேபோல் தமிழ்நாடு நிதி அமைச்சர் இலவசங்கள் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா?
இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ். சுதந்திரக் கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார்.
மேலும் அவரையும் பிரிட்டிஷூக்கு சாகும் வரை விஸ்வாசமாக இருப்பேன் என4க் கடிதம் எழுதிய சாவர்க்கரையும் பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம். அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் எனக் கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்துள்ளார்கள்.
வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்புக் கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்.
அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்சினையைப் பேசுவோம். ஓபிஎஸ்ஸூம், இபிஎஸ்ஸூம் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா எனக் கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம்” எனப் பேசியுள்ளார்.