(Source: ECI/ABP News/ABP Majha)
Trichy: மத்திய சிறையில் செல்போன் புழக்கம்.. அதிரடி சோதனையில் இறங்கிய போலீஸ்.. 6 செல்போன்கள் பறிமுதல்!
வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு பிரிவு உள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து, வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் சுமார் 130 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் இங்குதான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி கிடைக்கும்வரை இங்கு இருப்பார்கள்.
போதைப்பொருள் வழக்கில் தொடர்பு :
முன்னதாக, இங்கு அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) இந்த முகாமில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் 155 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த சோதனை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செல்போன்கள் பறிமுதல் :
இந்நிலையில், சிறப்பு முகாமில் சிலர் செல்போன் பயன்படுத்துவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள், சுரேஷ்குமார், அன்பு மற்றும் கே.கே.நகர் சரக உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சிறப்பு முகாமில் நேற்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சோதனையில் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 செல்போன்கள் ஆண்ட்ராய்டு வகையை சேர்ந்தவை ஆகும். இந்த செல்போன்கள் முகாம் வளாகத்தில் ஒரு மரத்தடியிலும், மற்றும் சில இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதொடர்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக செல்போன்கள், மடிக்கணினிகள் பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்று அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்