திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்! 7 ஆண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்பி துரை வைகோ சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?

திருச்சி: இது... இதுதான் வேண்டும். தத்தளித்த மக்களின் பிரச்னை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக திருச்சி எம்.பி., துரை வைகோ மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது எதற்காக என்று பார்ப்போம்.
திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு கிடைத்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், இனாம்குளத்தூருக்கு இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் வழங்கப்பட்டு வந்த மின்விநியோகம் தடைபட்டது.

அதன்பின், தற்காலிகமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்து வந்தது. மின்சாதன பொருட்களும் பழுதானது. இந்த பிரச்சினை குறித்து கடந்த ஏழு ஆண்டுகளாக, மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று காத்திருந்தனர். தேர்வு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாணவ, மாணவிகளின் தங்களின் பாடங்களை பயில்வதிலும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களின் நெடு நாள் நீண்ட இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 04.01.2025 அன்று இரயில்வே மேம்பாலக் கோரிக்கைக்காக இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, இனாம்குளத்தூர் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மாபேட்டை துணை மின்நிலையத்திலிருந்து ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளுக்கு முன்பு இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அதே முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, மாவட்டக் கழகச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தேன். பலகட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்கு பின், பொதுமக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்சாரம் வழங்குவதற்காக ரூ.24,92,270/- ஒதுக்கீடு செய்து, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.
விரைவில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம், இனாம்குளத்தூர் மக்களுக்கு தடையில்லா மின்விநியோகம் உறுதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன். இதனால், இனாம்குளத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ரஹமத்நகர், அண்ணா நகர், ராஜகாட்டுப்பட்டி, சின்ன ஆலம்பட்டி, புதுக்குளம், கீழப்பட்டி, ஜோதி விநாயகர் கோயில் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவதோடு, அப்பகுதியிலுள்ள உயிர் காக்கும் மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய மிக முக்கிய பயன்பாட்டிற்கும் இந்த தடையில்லா மின்சாரம் பயன்படும். இப்பணி முழுமையாக நிறைவடையும் வரை எனது கவனம் இதன் மீது இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.





















