இதுக்கு பணம் கேட்டால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கைதான் - மேயர் எச்சரிக்கை
அதிகாரிகளுக்கு நாங்கள் என்ன எதிரிகளா ? சிவகங்கை பூங்காவில் உடன் அனைத்து கவுன்சிலர்கள் பெயர்களையும் கொண்ட கல்வெட்டு வைக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை உள்ளது.

தஞ்சாவூர்: பாதாள சாக்கடை அடைப்பை நீக்க பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மேயர் சண்.ராமநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
தஞ்சை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் ரமேஷ், மாநகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள், அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர்.சண்.ராமநாதன் (தி.மு.க.) பேசுகையில், தஞ்சை மாநகராட்சியில் கடந்த ஆண்டு 80 சதவீதம் சாலைப்பபணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத சாலைப்பணிகள் ரூ.21.15 கோடி செலவில் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.
பின்னர் வார்டு கவுன்சிலர்கள் மத்தியில் நடந்த விவாதம் வருமாறு:
கோபால் : எனது வார்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு அதிகம் ஏற்படுகிறது. வண்டி வரவில்லை. பாதாள சாக்கடை அடைப்பை எடுக்க மக்களிடம் இருந்து பணத்தை வாங்குகின்றனர். சில பகுதிகளில் சாக்கடை நீர் எதிர்த்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேயர் சண்.ராமநாதன் : பாதாள சாக்கடை அடைப்பு சீரமைக்கும் வாகனம் ஒன்று பழுதாகி இருந்தது சரி செய்யப்பட்டுள்ளது. 4 வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த வாகனங்கள் வந்தவுடன் அனைத்து பகுதிகளும் பாதாள சாக்கடை அடைப்புகள் உடனடியாக சரி செய்யப்படும்.
காந்திமதி : பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க பணம் வாங்குகின்றனர். குறித்து தெரிவித்தோம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் எங்களிடம் கோபப்படுகின்றனர். பணம் கொடுத்ததற்கான ஆதாரமும் உள்ளது. எனது வார்டு பகுதிகளில் குடிநீர் வரவில்லை. புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல் கீழராஜவீதி பகுதியில் அரண்மனை செல்லும் வரை தள்ளு வண்டிகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேயர் சண்.ராமநாதன் : பாதாள சாக்கடை அடைப்பை எடுக்க பணம் கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குறித்து தெரிவியுங்கள். அவர்கள் மீது இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள். பாதாள சாக்கடை அடைப்பை நீக்க நான்கு பகுதிகளாக பிரித்து ஆட்கள் நியமனம் செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்ட பின்னர் வாடகை நிர்ணயம் செய்யப்படும். ஒவ்வொரு கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடப்பட்டு வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகந்தி : சிவாஜி நகர் பகுதியில் தண்ணீர் கசிவால் அங்குள்ள சிறு பாலம் சேதமடைந்துள்ளது. உடன் சீரமைக்க வேண்டும். நேரில் சென்று ஆணையர் ஆய்வு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
மேயர் சண்.ராமநாதன் : இது குறித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையரை கேட்டுக்கொள்கிறேன்.
கேசவன் : எனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தான் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். கிருஷ்ணன் கோயில் இரண்டாம் தெரு, நான்காம் தெரு, சிவராயர் தோட்டம் மூன்றாம் தெரு, ஐயன் பெருமாள் கோயில் நாலாம் தெரு சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும். எங்கள் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. அதனை பொதுமக்கள் பாட்டிலில் பிடித்து என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். நாய்கள் தொல்லை உள்ளது.
மேயர் சண்.ராமநாதன்: தஞ்சாவூர் மாநகராட்சியில் 5500 நாய்கள் உள்ளதாக கணக்கு தெரிவித்துள்ளனர். இதில் 3750 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
உஷா ; ராஜராஜன் நகர் போர்செட்டில் இருந்து வரும் தண்ணீர் கலங்கலாக உள்ளது. ஆறு மாதமாக இப்பிரச்சினை நீடித்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும். நகராட்சி பள்ளியில் நடைபாதை அமைக்க வேண்டும். சமையல் கூடத்தையும் சீரமைக்க வேண்டும்.
ஜெய் சதீஷ் : செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை தோண்டப்பட்டு இணைப்பு வழங்கப்படவில்லை. இங்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மண் அகற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது.
கண்ணுக்கினியாள்: எனது வார்டு பகுதியில் வீட்டிற்குள் பாதாள சாக்கடை கழிவு நீர் வருகிறது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மண் அள்ள சிறிய வாகனம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. எனது வார்டு பகுதியில் மாதா கோயில் தெரு, அய்யனார் கோவில் தெரு, வாண்டையார் தெரு ஆகியவற்றில் பாதாள சாக்கடையை மண் அள்ள வேண்டும். நாங்களே அய்யனார் கோயில் தெருவில் பாதாள சாக்கடை மண்ணை அள்ள முயற்சி செய்தோம். இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பே கழிவுநீர் ஓடுகிறது. எனது வார்டு பகுதியில் இரண்டு சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. மற்ற சாலைகளையும் அமைக்க வேண்டும்.
ஆனந்த் : தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் வார்டு உறுப்பினர்கள் பெயர்களைக் கொண்ட கல்வெட்டு இன்னும் வைக்கப்படவில்லை.
மேயர் சண்.ராமநாதன் : பாதாள சாக்கடை பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக ஆட்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு நாங்கள் என்ன எதிரிகளா ? சிவகங்கை பூங்காவில் உடன் அனைத்து கவுன்சிலர்கள் பெயர்களையும் கொண்ட கல்வெட்டு வைக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை உள்ளது. அங்குள்ள கல்வெட்டை அகற்றக்கூடாது. இதேபோல் மாநகராட்சி கூட்டு அரங்கில் இதுவரை பதவியில் இருந்த தலைவர்களின் புகைப்படங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடிகளை அதிகம் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மாநகராட்சியுடன் 14 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. மாநகராட்சியில் சேரும் குப்பைகள் மற்றும் புதிதாக இணைக்கப்படும் ஊராட்சிகளில் உள்ள குப்பைகளை நகரின் வெளிப்புறத்தில் கொண்டு சென்று கொட்டுவதற்காக 18 ஏக்கர் அளவில் நாம் பணம் கொடுத்து இடம் வாங்க உள்ளோம். எதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படும். குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது என கவுன்சிலர் தவறான தகவலை சபைக்கு தர வேண்டாம்.
ஆனந்த் : தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலைக்கு முன்பாக நந்தி சிலை அமைக்க வேண்டும். இதேபோல் மேம்பாலம் ரவுண்டானா பகுதியிலும் நந்தி சிலை அமைக்க வேண்டும். கரந்தையிலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு ஆறாம் நம்பர் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேயர் சண்.ராமநாதன் : எம்பி நிதியிலிருந்து நீங்கள் விரும்பும் வகையில் நந்தி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இருந்து கரந்தை வரை இயங்கி வந்த பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.




















