உலகச் சுற்றுச்சூழல் தினம்; வளம்மீட்பு பூங்காவில் உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நடும் விழா
பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சூற்றுச்சுழல் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தஞ்சாவூர்: உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் ராஜசேகர், தஞ்சை பசுமை இயக்கம் அமைப்பாளர் டாக்டர்.ராதிகா மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வல்லம் நகர திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சூற்றுச்சுழல் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதி மொழியை வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் வாசித்தார். வல்லம் வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் பொதிய மரம், அரசமரம், ஆலமரம்,மகாகனி உள்பட 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி,மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மாதவன், வல்லம் பேரூராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.இரா.அன்பழகன், சுந்தர்ராஜன்,அமுதா அழகர்சாமி, தஞ்சை இன்னர் வீல் கிளப் பிரஸிடண்ட் ரேகா குபேந்திரன், செயலாளர் தனலட்சுமி திருவள்ளுவர்,பொருளாளர் நந்தினி சக்திவேல்,முன்னாள் மாவட்ட தலைவி டாக்டர்.உஷாநந்தினி, வல்லம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வல்லம் அரசு பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாணிக்கம் நன்றி கூறினார்.
நாம் வாழ்கின்ற புவியும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல அபூர்வமானதும் கூட. இந்த பூமிப்பந்து, பல்வேறு வகையான நீர்- நிலவளங்கள், மலைகள், மண்வளங்கள் போன்ற இயற்கை காரணிகளாலும், சிறு செடி முதல் படர்ந்த பசுமைக் காடுகள், பூச்சிகள், மீன்கள், பலவகைப்பட்ட விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற உயிருள்ள காரணிகளாலும் இணைந்து பல்வேறு சூழ்நிலை மண்டலங்களாக உருவாகி உள்ளது.
ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகள் அனைத்தும், அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒருவகையில் கண்டிப்பாக இணைந்து செயல்பட்டாக வேண்டும். உதாரணமாக, அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் மிகவும் அவசியம். தண்ணீர், மழை மூலம் கிடைக்கிறது. தேவையான மழை பொழிவிற்கு அதிகப்படியான மரங்கள் அவசியமாகின்றன. இப்படியாக ஒரு உயிருள்ள காரணி, ஒரு உயிரற்ற காரணி என ஒவ்வொன்றும் இணைந்து, சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளன.
இந்த கட்டமைப்பின் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு இடர்பாடு ஏற்படுமானால், அங்குள்ள சுற்றுச்சூழல் வாழ்விடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, மரங்களும், காடுகளும் அழிக்கப்பட்டால் மழைவளம் குறைகிறது. மழை இல்லையென்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் குறைபாட்டால் உயிரினங்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் சுற்றுச்சூழலும் அதன்தொடர் நிகழ்வுகளும் அமைகின்றன.
பூமியையும், அதன் மீதுள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றத் தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக சுற்றுச்சூழல் தினம்' கொண்டாடப்படுகிறது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.





















