திருச்சியில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டம்
காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இளையசமூதாயத்தை காக்க முடியும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்
திருச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கஞ்சா, மது, தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருள் பழக்கத்தில் சிக்கி, பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாநகர காவல்துறையினர் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களைத் தடுக்கும் திட்டத்தை வகுத்துள்ளனர். எதிர்காலத்தில் குற்றங்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுறை வழங்கப்பட்டு வருகிறது என மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சி மாநகரில் 2020 ஆண்டு 115 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அதே நேரத்தில் 2021 ஆண்டு எண்ணிக்கை 201 ஆக உயர்ந்தது. 2020 ஆண்டு தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 137 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர், 2021 ஆண்டு அரசு சட்டத்திற்கு பிறம்பாக குற்றச்செயலில் ஈடுபட்ட 283 பேர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சியில் திருட்டு, கொலை போன்ற பல குற்றங்கள் நடந்ததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர். கஞ்சா வியாபாரிகள், குட்கா விற்பவர்கள் உட்பட பலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாநகரத்தில் போதை பொருள், சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாகிய இளைஞர்கள் மற்றும்சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காலபோக்கில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது வேதனை குறியது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு முதல் அடிமையான இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய கல்வி மற்றும் தொழில் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்களுக்கு வலுவான செய்தியை அனுப்ப பள்ளிகளில் ஆலோசனை நிகழ்ச்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்றார். மேலும் மாநகரில் உள்ள குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மைனர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டு உள்ளனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதே இதற்குக் காரணம் எனச் சுட்டிக் காட்டினார். இதுபோன்ற குழந்தைகள் பல சமூக பொருளாதார காரணங்களுக்காக பள்ளிகளை விட்டு வெளியேறுகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யத் தொடங்கும் போது, அவர்கள் கெட்ட பழக்கங்களை கற்று கொள்கிறார்கள்.
போதைப்பொருளை வாங்குவதற்கு அவர்களுக்குப் பண பற்றாக்குறை உள்ளது. அதனால், பணத்தைப் பெற வேறு வழிகளைத் தேடுகிறார்கள். கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவதே அவர்களுக்கு எளிதான வழி, என்று கூறினார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இது போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் பெற்றோர்கள் முழுக்க முழுக்க தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இளைய சமூதாயத்தை காக்கமுடியும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.