அரிஸ்டோ மேம்பாலம் சில நாட்ளில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வுக்காக தான் உயர் மட்ட பாலம் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கே. என். நேரு
திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதில் அரசு விழாக்கள் குறித்த புகைப்படங்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா, தொழில் குழுக்கள், பாரம்பரிய அரிசி வகைகள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தினந்தோறும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் பேசுகையில், “இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மண்டலமாக தமிழகம் திகழ்வதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதனை பிரதமர் மோடியும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வேண்டும் என முதலமைச்சர் கேட்டிருக்கிறார். தமிழக கவர்னரின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாக பதில் அளித்து விட்டார். அதைப்பற்றி நான் எதுவும் கூற முடியாது. கவர்னர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்துவிட்டார். அரிஸ்டோ மேம்பால பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் போக்குவரத்து தொடங்கப்படும்.
திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சரின் தனிச்செயலரிடம் பேசியபோது, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்ட வரைவு அறிக்கையை விரைந்து தயார் செய்யுங்கள். திருச்சியை அந்த திட்டத்தின் கீழ் முழுமையாக எடுத்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் திட்ட ஆய்வுக்காக தான் உயர் மட்ட பாலம் ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பால்பண்னை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் வே சாலைக்கு திட்ட அனுமதிக்காக காத்திருக்கிறோம், திருச்சியில் ரூ.600 கோடியில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல்பார்க்) கொண்டு வர முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆகவே இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா திருச்சியின் வளர்ச்சிக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும். இதற்கு பஞ்சப்பூரில் 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பஞ்சப்பூரில் இருந்து துவாக்குடி அசூர் வரை அசுர வளர்ச்சி ஏற்படும். அதேபோன்று மணப்பாறையில் உணவு பதப்படுத்தும் ஆலை கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள். பஞ்சப்பூரில் இருந்து கரூர் பைபாஸ் சாலை போடுவதற்கு டெண்டர் விடப்பட உள்ளது. இவையெல்லாம் முடிந்தால் திருச்சியும் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறும். அதேபோன்று தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டத்திற்கு தனியாக குடிநீர் திட்டம் கொண்டுவர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் பேசி இருக்கின்றேன். திருச்சியில் புதிய கட்டமைப்புகளை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.