Crime: திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
திருச்சி மாவட்டத்தில் வெவ்வெறு சம்பவங்களில் 2 பேர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்த லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியின் மகன் சிபி வர்மன் (வயது 25). பி.இ. என்ஜினீயரிங் படித்துள்ள இவரும் முசிறியை சேர்ந்த 25 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை மீறி சிபி வர்மனும், அந்த பெண்ணும் கடந்த 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சிபி வர்மனின் வீட்டுக்கு வந்து, அந்த பெண்ணை பிரித்து அழைத்து சென்றுவிட்டனர். மேலும் இது தொடர்பாக முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் இருகுடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இருகுடும்பத்தினரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபட கூடாது என எழுதி கொடுத்தனர். இதனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை பிரித்து வைத்து விட்டார்களே என சிபிவர்மன் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிபி வர்மன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முசிறி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிபி வர்மனின் பெற்றோர் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில், எனது மகனின் சாவுக்கு காரணமான பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அபிபோஸ்பான் (வயது 20). இவர் கடந்த 2 மாதமாக திருச்சி உய்யகொண்டான்திருமலை கணபதிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிஷப்ஹீபர் கல்லூரியில் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேசன் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே இவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அபிபோஸ்பான் தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் சாப்பிட்டீர்களா?. நான் சாப்பிட்டுவிட்டேன். எனக்கு மனசு சரியில்லை என்று கூறி உள்ளார். சிறிதுநேரம் கழித்து தனது தந்தையின் செல்போனுக்கு, "எனக்கு வாழப்பிடிக்கவில்லை. படிக்க பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்" என்று உருக்கமாக பேசி வாய்ஸ்மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை கேட்டு பதறிப்போன அவரது தந்தை, மகனின் நண்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவரது அறைக்கு சென்று பார்க்கும்படியும் கூறி உள்ளார். இதையடுத்து அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, அபிபோஸ்பான் தூக்கில் தொங்கினார். உடனடியாக இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அபிபோஸ்பான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050