TN 10th Result 2024: அபாரம்! 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகனும் தேர்ச்சி - வந்தவாசி பெண்ணுக்கு குவியும் பாராட்டு
வந்தவாசியில் தனது மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தாய் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு எழுதிய 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அம்மாவும் மகனும் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிற்றுண்டி தற்காலிக சமையலராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நித்யாவிற்கு அரசு வேலைக்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவாசியில் உள்ள தனியார் கல்வி மையத்தில் நித்தியாவும் அவரது மகன் சந்தோஷம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நித்யாவும் அவரது மகன் சந்தோஷம் தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் நித்யா 274 மதிப்பெண்களும் அவரது மகன் சந்தோஷ் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் தாயும் மகனும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் வந்தவாசி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ABP நாடு குழுமத்தில் இருந்து நித்யாவிடம் பேசுகையில்,
நான் 2007 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு முடித்தேன். பிறகு சில குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. சில வருடங்கள் ஓடின அதன்பிறகு எனக்கு திருமணம் நடந்தது. என்னுடைய கணவர் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். நான் விவசாய வேலைகளை செய்து வந்தேன். பின்னர் கோவிலூர் தொடக்க ஊராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தின் மூலம் எனக்கு பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு சமையல் செய்யும் வேலை கிடைத்தது அந்தவேலையைத்தான் செய்து வருகிறேன்.
பத்தாம் வகுப்பு படித்து முடித்தல் எனக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என எண்ணி நான் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத முடிவுசெய்து வந்தவாசியில் உள்ள கோச்சிங் சென்டரில் வாரத்திற்கு இரண்டு நாள்கள் சென்று படித்து வந்தேன், அப்போது என்னுடைய மகனும் என்னுடன் வந்து படித்துவருவன், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான் தேர்ச்சி பெற்றுள்ளேன்,நான் தொடர்ந்து படிக்க உள்ளேன் எனக்கு சத்துணவு அமைப்பாளர் அல்லது அங்கன்வாடி ஆசிரியர் ஆகுவதே என்னுடைய லட்சியம் என்றும் தெரிவித்தார். மேலும் என்னுடைய நண்பர்கள் ,சொந்தக்காரங்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்று கூறினார்.