(Source: ECI/ABP News/ABP Majha)
பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி; ஆரணி அருகே அதிர்ச்சி
ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(Tiruvannamalai News) திருவண்ணாமலை ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட தொடக்க பள்ளியில் ஆசிரியர்கள் , சமையலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
காலை உணவு சாப்பிட மாணவர்கள் வாந்தி, மயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கெங்காபுரம் கிராமம் சமத்துவபுரத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், 25 மாணவ - மாணவிகள் பயில்கிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளியிலும் மாணவ மாணவியருக்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, காலை உணவாக ‘உப்புமா’ சமைத்து வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்று அமர்ந்திருந்த 13 மாணவ, மாணவிகளுக்கு திடிரென வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன.
மேலும் படிக்க;Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்
மாணவர்களுக்கு சிகிச்சை
இதனை அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்கள் அனைவரையும் மீட்டு, அருகிலுள்ள இருந்த பெரியக்கொழப்பலூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துசென்றனர். அங்கு மாணவ, மாணவியருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாணவர்களை உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். யாருக்கும் ஆபத்தான சூழலில் இல்லை. ஆனாலும், காலை உணவு சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க;CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்- மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு
கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட தொடக்கப்பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் காலை உணவு சமைத்தவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அப்போது உணவில் தவறுதலாக ‘பல்லி’ விழுந்திருக்கலாம். அதை கவனிக்காமல் சமைத்து மாணவர்களுக்குப் பரிமாறியிருக்கலாம் என முதற்கட்டமாகத் தகவல் தெரியவந்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பதறி அடித்துக்கொண்டு கண்ணீர் மல்க ஆரணி அரசு மருத்துவமனைக்கு வந்து பிள்ளைகளை பார்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர், இந்தச் சம்பவத்தால், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.