திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் எந்தெந்த நாட்களில் என்ன பிரசாதம்? இதோ பட்டியல்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பௌர்ணமி தினங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் லட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
Thiruvannamalai Annamalaiyar Kovil: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கப்பட்டுள்ளது.
கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம்:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, படிப்படியாக பல்வேறு கோயில்களிலும் தற்போது நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் பிரசாதம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்புகள் 2023-2024 அறிவிப்பு எண். 29-ல் திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்குதல் திட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து அறிவிப்பினை நடைமுறைபடுத்தும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
அதோடு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தையும், காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதேபோன்று திருவல்லிக்கேணி, மதுரை , திருப்பரங்குன்றம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழங்கப்படும் பிரசாத பட்டியல்
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கலந்துக்கொண்டனர். பௌர்ணமி தினங்களில் 125000 முதல் 150000 இலட்சம் லட்டு வழங்கப்படும்.
வெள்ளி கிழமை 60000 முதல் 70000 பக்தர்களுக்கு கேசரியும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 60000 முதல் 70000 ஆயிரம் பக்கதர்களுக்கு லட்டும், திங்கள் மற்றும் வியாழன் கிழமையில் 25000 முதல் 40000 பக்தர்களுக்கு லட்டும் செவ்வாய் கிழமை 25000 முதல் 40000 பக்தர்களுக்கு லெமன், தயிர் சாதமும், புதன் கிழமையில் 25000 முதல் 40000 பக்தர்களுக்கு கேசரியும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர் திருக்கோவில் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் -
அன்னதானம் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் கோவில் செயலி வாயிலாகவும், துறை இணையதளத்தில் "குறைகளை பதிவிடுக" என்ற பிரிவின் வாயிலாகவும் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம். அந்தந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகவும் குறைகளை தெரிவிக்கலாம்.