ஜவ்வாது மலைவாழ் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய ஆளுநர் ஆர்.என். ரவி
ஜவ்வாது மலையில் விளையக்கூடிய பொருட்களைக் கொண்டு மலைவாழ் மக்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை மலைவாழ் மக்களோடு அமர்ந்து ஆளுநர் ரவி உணவருந்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா ஜவ்வாதுமலையில் விளாங்குப்பம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். விளாங்குப்பம் கிராமத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் விளாங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சார்பில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த பதாகைகளை பார்வையிட்டார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய உணவு கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்திய வரலாற்றிலேயே ஜவ்வாதுமலை மலை கிராமங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்றாவது முறையாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவிக்கு மலை வாழ் மக்கள் ஜவ்வாது மலையில் விளையக்கூடிய சிறுதானியங்கள் சாமை மற்றும் சீதாப்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், விளாம்பழம், உள்ளிட்ட பல வகைகள். மேலும் இளநீர், ஜவ்வாதுமலையின் மலைத்தேன் உள்ளிட்டவைகளை அன்பளிப்பாக வழங்கினர்.
ஆளுநர் ரவி மலைவாழ் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார்
அதனைத்தொடர்ந்து ஆளுநர் ரவி ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் மக்களால், மலையில் விளையக்கூடிய சாமை, வாழைப்பூ, கம்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாமை கேசரி, வாழைப்பூ வடை, கம்பு வடை, தயிர் சாதம், எலுமிச்சை பழம் சாதம், கொழுக்கட்டை, காராமணி சுண்டல் அப்பளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உணவுகளை மலைவாழ் மக்களோடு அமர்ந்து சாப்பிட்டார். தொடர்ந்து விளாங்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுனணயும் நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துரை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.