நெல்லை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் - புதிய ஆட்சியர் கார்த்திகேயன்
அடிப்படை கல்வி, பொது சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த விஷ்ணு பணியிட மாறுதலாகி சென்னைக்கு சென்ற நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். வரலாற்று சிறப்பு மிகுந்த நெல்லை மாவட்டத்தில் 218 வது மாவட்ட ஆட்சித்தலைவராகவும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனியாக பிரிக்கப்பட்ட பிறகு 38வது ஆட்சித் தலைவராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரலாற்று சிறப்புமிக்க நெல்லை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி என்றும், தமிழ்நாடு அரசின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்தி நமது மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக உயர்த்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும். அடிப்படை கல்வி, பொது சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசித்து மாவட்ட அளவில் முன்னெடுக்கப்பட வேண்டியா பல்வேறு திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்த அவர், பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள் கருத்துக்களை கேட்டறிந்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், கோட்டாட்சியர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.