Tirunelveli: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த இருவர் உயிரிழப்பு.. நெல்லையில் சோகம்..!
சென்னையில் இருந்து நெல்லை வந்து தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. ரயில்வே தபால் சேவை நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது இவருடன் நண்பர்களான சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்ரீராம், ஆட்டோ ஓட்டுநர்களான அருண், வினோத் ஆகியோரும் வந்துள்ளனர். இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர், அங்கு அவர்கள் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஸ்ரீராம் மற்றும் அருண் ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அறிந்த மற்ற நண்பர்களும் அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுத்தமல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் தேடுதல் பணியை தொடர்ந்தனர். தேடுதலுக்கு பின் உயிரிழந்த நிலையில் அருண்குமார் மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்து தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் இரங்கல் செய்தி குறிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையை சேர்ந்த ஸ்ரீராம்(25) மற்றும் அருண்குமார்(23) ஆகியோர் நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்