HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அலர்ட் விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அடுத்தடுத்து உருவான இரண்டு புயல் சின்னங்களால் தமிழகத்தில் கன மழை பெய்தது. இதனையடுத்து நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் மழையானது ஏமாற்றிய நிலையில் அடுத்த கட்ட ஆட்டத்தை வடகிழக்கு பருவமழை தொட்டங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழையானது தென் மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேலும் வருகிற 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிருவாகத்திற்கு தமிழக அரசு அலர்ட்டாக இருக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் மிக கன மழை
குறிப்பாக, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலூர், அரியலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம். திருவாரூர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை அலர்ட்
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.





















