Jana Nayagan: "நினைத்தது நடந்தது”.. விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. சோகத்தில் தமிழ் சினிமா!
விஜய் நடித்த ஜனநாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
பிரச்னையாக வந்த சென்சார் போர்டு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 69வது படமாக உருவாகியுள்ளது “ஜனநாயகன்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மமிதா பைஜூ, நரேன், பாபி தியோல், பிரியாமணி, நாசர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இந்த படம் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசி படம் என அறிவிக்கப்பட்டதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஓராண்டுக்கு முன்பே ஜனநாயகன் படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 27ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சியும், 2026 ஜனவரி 3ம் தேதி ஜனநாயகன் ட்ரெய்லரும் வெளியானது. இப்படியான நிலையில் ஜனநாயகன் படத்துக்கு வில்லனாக சென்சார் போர்டு சான்றிதழ் மாறியுள்ளது.
நீதிமன்றம் வரை சென்ற வழக்கு
ஜனநாயகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து டிசம்பர் கடைசியில் சென்சார் போர்டுக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டது. படம் பார்த்த 5 பேர் கொண்ட குழு சில காட்சிகளை நீக்கியும், சில காட்சிகளில் ஆடியோவை மியூட் செய்யவும் பரிந்துரை செய்தது. தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்ட நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்ததாக தகவல் வெளியானது.
ஆனால் ஜனநாயகன் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் சென்சார் சான்று கிடைக்காததால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து சற்றும் தாமதிக்காமல் கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அப்போது ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு துறை அடையாளங்கள் பயன்படுத்த அனுமதி பெறவில்லை எனவும் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு படம் பார்த்த தணிக்கைத்துறை அதிகாரிகளில் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என சொல்லி ஷாக் கொடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த படக்குழு தரப்பு, வேண்டுமென்ற ஜனநாயகன் படத்திற்கு பிரச்னை ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் தர வேண்டிய சான்று கிடைக்கவில்லை. 5 பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையானோர் சான்று வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதை கருத்தில் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது. இருதரப்பு நியாயத்தையும் கேட்ட நீதிபதி ஜனநாயகன் ரிலீஸ் தேதியான ஜனவரி 9ம் தேதி காலை தீர்ப்பு வழங்கப்படும் என கூறினார்.
இதனால் படம் ரிலீசாகுமா என கேள்வி எழ தொடங்கியது. உலக நாடுகளில் படம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ரசிகர்களுக்கு பணம் மீண்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
இதுதொடர்பாக கேவிஎன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்வதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். ஜனவரி 9 அன்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
— KVN Productions (@KvnProductions) January 7, 2026
இந்தத் திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமையையும் தொடர்ச்சியான அன்பையும் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவே எங்கள் மிகப்பெரிய பலம், அது முழு 'ஜன நாயகன்' குழுவிற்கும் எல்லாமே ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















