முதலில் 10 மகள்கள்.. 11வதாக பிறந்த ஆண் குழந்தை.. கொண்டாட்டத்தில் தம்பதியினர்!
முந்தைய அனைத்து குழந்தைகளும் உயிருடன் இருக்கும்போது அதே பெண் பதினொன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த எந்த வழக்கையும் தனது வாழ்க்கையில் பார்த்ததில்லை என்று பிரசவம் பார்த்த டாக்டர் கூறியுள்ளார்.

ஹரியானாவில் ஆண் குழந்தை வேண்டி தவம் கிடந்த தம்பதியினருக்கு 10 பெண் குழந்தைகளுக்குப் பின் 11வதாக பிறந்த குழந்தை மூலம் அவர்களின் ஆசை நிறைவேறிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு சஞ்சய் மற்றும் சுனிதா என்ற தம்பதியினருக்கு 10 மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் ஒவ்வொரு முறையும் ஆண் குழந்தைக்காக காத்திருக்கும்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. எப்படியாவது ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த தம்பதியினர் வெற்றி பெற்று விட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். புதிய உறுப்பினரின் வருகையால் சஞ்சய் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் தம்பதியினருக்கும், அவர்களின் 10 மகள்களுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுனிதாவின் பிரசவத்திற்கு உதவிய மகப்பேறு மருத்துவர் இந்த சம்பவத்தால் தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். முந்தைய அனைத்து குழந்தைகளும் உயிருடன் இருக்கும்போது அதே பெண் பதினொன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த எந்த வழக்கையும் தனது வாழ்க்கையில் பார்த்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் பல சுகப்பிரசவம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதனால் சுனிதாவின் கருப்பையில் ஏற்படும் பாதகமான தாக்கங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவரின் கருப்பை மிகவும் பலவீனமாகி விட்டது.
பிறந்த ஆண் குழந்தைக்கு சற்று இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சஞ்சய் தனக்கென ஒரு நிரந்தர வேலையில்லாமல் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சுனிதாவின் 11வது பிரசவமானது தனது வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்றதாக அவர் கூறினார்.
என்னதான் நானும் சுனிதாவும் நீண்ட காலமாக ஒரு ஆண் குழந்தைக்காக காத்திருந்தாலும், இருவரும் எங்கள் 10 மகள்களிடம் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என்று சஞ்சய் தெரிவித்துள்ளார். ஒரு ஆண் குழந்தையை வளர்ப்பது போலவே தனது அனைத்து மகள்களையும் வளர்த்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் நல்ல கல்வியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 10 மகள்களின் பெயர்களை கேட்டால் அவர் சொல்ல திணறினார். இதில் ஊடகவியலாளர்களிடம் 9 மகளின் பெயரை சஞ்சய் சரியாக தெரிவித்துள்ளார். 10 பேரில் ஒருவரை மட்டும் உறவினர்கள் தத்தெடுத்துள்ளனர், மீதமுள்ள ஒன்பது பேர் சஞ்சய் - சுனிதாவோடு வசித்து வருகின்றனர்.
11 வது குழந்தை மகன் பிறந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானாலும் சிலர் பாராட்டு தெரிவிக்காமல் சஞ்சயை கடுமையாக சாடினர். பிறந்த குழந்தையில் பாகுபாடு பார்க்கவில்லை என்றால் பெண் குழந்தைகளோடு நிறுத்தியிருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆண் குழந்தைக்காக காத்திருந்த அவர்கள் பெண் குழந்தைகளை வளர்க்க தகுதியற்றவர்கள். எனவே மாநில அரசு அந்த குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த விமர்சனங்களை சஞ்சய் - சுனிதா தம்பதியினர் புறம் தள்ளியுள்ளனர். கருவில் இருக்கும்போதே பெண் குழந்தைகளைக் கொல்லும் நிலையில் சஞ்சய் மற்றும் சுனிதா ஆகியோர் ஊக்கமளிக்கும் நபர்களாக உள்ளனர் என உள்ளூர் மக்கள் பாராட்டியுள்ளனர். தனது மகிழ்ச்சிக்கான ஆதாரம் அவரது மகன் என்றாலும், பெண்கள் ஆண்களுக்கு சமம் என்றும், அவர்களுக்கு சம உரிமை, அதிகாரம் அளிக்கப்பட வேண்டுமெனவும் சஞ்சய் கூறியுள்ளார்.





















