Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vijay JanaNayagan: ஜனநாயகன் பாணியில் வெளியாவதற்கு முன்பாக சர்ச்சை மற்றும் பிரச்னையில் சிக்கிய, விஜய் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Vijay JanaNayagan: விஜயின் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பாக சர்ச்சை மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வது என்பது புதியதல்ல.
ஒத்திவைக்கப்பட்ட ஜனநாயகன்:
விஜய் படங்கள் வெளியீட்டின் போது சர்ச்சைக்குள்ளாவதும், பிரச்னைக்குள்ளாகி நீதிமன்றம் வரை செல்வது என்பதும் புதியதல்ல. கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாகவே விஜய் படங்கள் என்றாலே, நீதிமன்றம் வரை சென்றபிறகு தான் திரைக்கு வரும் என்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ர சந்தேகத்தால் பிபி மாத்திரைகளுடன் தான், முதல் நாள் முதல் காட்சிக்கு விஜய் ரசிகர்கள் தயாராவார்கள் என்பது அனைவரும் அறிந்தது. அந்த வரிசையில் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, படத்தின் வெளியீட்டை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரையில் வெளியீட்டின் போது பிரச்னையில் சிக்கிய விஜய் படங்கள் குறித்து தொகுப்பில் அறியலாம்.
சர்ச்சை, பிரச்னைக்குள்ளான விஜய் படங்கள்:
காவலன்: சட்டம் & ஒழுங்கு கவலைகள் காரணமாக தமிழ்நாட்டில் கடைசி நிமிட வெளியீட்டு தடைகளை எதிர்கொண்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்டது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகும், விஜய் நீண்டகாலத்திற்கு பெற்ற வெற்றி படமாக அமைந்தது.
துப்பாக்கி: தலைப்பு மற்றும் சில காட்சிகளில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்புகள் மற்றும் சட்ட அழுத்தங்களை எதிர்கொண்டது. சிறிய மாற்றங்களுக்குப் பிறகு படம் வெளியானது. வணிக ரீதியில் விஜயை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற படமாக உருவெடுத்தது.
தலைவா: அரசியல் மற்றும் சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக தமிழ்நாட்டில் வெளியீடு நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் வெளியான பல நாள் தாமதத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் ரிலீஸானது. இதனால் வணிக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை.
கத்தி: வெளியீட்டிற்கு முன் இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பான எதிர்ப்புகளை எதிர்கொண்டது. கடைசி நிமிட நிச்சயமற்ற தன்மை, இருப்பினும் வெளியிடப்பட்டது மற்றும் பிளாக்பஸ்டராக மாறியது. படத்தில் இடம்பெற்ற விஜயின் செய்தியாளர் சந்திப்பு காட்சி, மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
புலி: நிதி மற்றும் விநியோகப் பிரச்னைகளை எதிர்கொண்டதால் சில திரையரங்குகளில் வெளியீடு ரத்து செய்யப்பட்டது.
மெர்சல்: ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தொடர்பான வசனங்களால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடைசி நேரத்தில் தணிக்கை குழுவின் அனுமதியை பெற்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது
சர்கார்: வாக்குரிமை தொடர்பான காட்சிகள் தொடர்பாக அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. வெளியீட்டிற்கு முன் சட்டப்பூர்வ புகார்கள்; மாற்றங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்தது.
மாஸ்டர்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெளியீடு மற்றும் திரையரங்கு ஆக்கிரமிப்பை பாதித்தன. வெளியீட்டிற்கு முன் திரையிடுவதற்கான அனுமதிகள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டது. இருப்பினும், கொரோனாவிற்கு பிறகு தமிழ்சினிமாவை மீட்டெடுத்தத்தில் இந்த படம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மீண்டும் சாதிப்பாரா விஜய்?
நிதி, அரசியல், இலங்கை தமிழர், வணிகம் என பல்வேறு விதங்களில் விஜயின் திரைப்படங்கள் கடைசி நேரத்தில் சிக்கலை எதிர்கொள்வது என்பது புதியதல்ல. ஆனால், தற்போது விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறியிருப்பதால், அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சில நகர்வுகளும் ஜனநாயகன் படத்தின் பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பிரச்னைகளை எல்லாம் தாண்டி, ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும்? விஜயின் கடைசி படம் அவரது மிகப்பெரிய வெற்றி படமாக அமையுமா? என்பதே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















