உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படுமா? - காத்திருக்கும் தொழிலாளர்கள்
உப்பள தொழிலில் ஈடுபடும் பெண்கள் 40 கிலோ எடை கொண்ட உப்பு கூடையுடன் உப்பு அம்பாரம் செய்யும் போது கர்ப்பப்பை இறக்கம், குடலிறக்கம் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்தியாவின் உப்பு தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பிற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா, வடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோரப் பகுதிகளில் சுமார் 25,000 இயக்க பரப்பளவில் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்புளத் தொழிலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழிலில் பாத்தி மிதித்தல், உப்பளத்தை செம்மைப்படுத்துதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு பண்டல்கள் கட்டுதல், உப்பு பாக்கெட் பணி, உப்பு லாரிகளில் ஏற்றுதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு கூடையுடன் தலையில் சுமந்து உப்பு அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது. உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி முடுக்கு காட்டைச் சேர்ந்த உப்பளத்தொழிலாளி ராமலட்சுமி கூறும்போது, “உப்பளத் தொழிலாளர்கள் நீண்ட நீண்ட கால கோரிக்கை தனி நல வாரியம் வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு உள்ளது போல் உப்பளத்தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அப்போதுதான் பல தொழிலாளர்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை பெற முடியும்” என்கிறார். மேலும், “உப்பளத்தில் அதிக அளவில் பெண்கள் வேலை பார்த்து வேண்டி வருகின்றனர். இவர்கள் சுமை தூக்குதல், பாத்தி மிதித்தல், உப்பு வாறுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பதால் கால்களில் கொப்பளம் ஏற்படுதல், கர்ப்பப்பை இறக்கம், குடலிறக்கம் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். கழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சில உப்பளங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான உப்பளங்களில் கழிப்பறை வசதி என்பது இல்லை. முதலுதவி பெறுவதில் கூட சிக்கல் இருக்கிறது” என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, “தமிழகத்தில் 36 வாரியங்கள் உள்ளன. தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் உப்பள தொழிலாளர்கள் உள்ளடங்கி உள்ளனர். உப்பளத்தொழில் பருவம் சார்ந்த தொழில். ஒரு நாள் மழை பெய்தாலும் உப்பளத்தொழிலாளர்களுக்கு கடுமையாக வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். இந்த பிரச்சனை இவர்களோடு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் மழைக்கால நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு அந்த உதவி கிடைத்து வருகிறது. உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் உப்பு உற்பத்தி ரீதியிலான லாப பங்கீட்டு தொகையை மூன்று சதவீதம் வசூலித்தாலே நல வாரியத்தை திறம்பட செயல்படுத்த முடியும். உப்பளத் தொழிலாளர்களின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும்” என்கிறார்.