தூத்துக்குடி: ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வெளியேற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்
’’ஆபத்தான நிலையில் பாலத்தின் சுவற்றில் நடந்தும், நீச்சல் அடித்தும் பயணிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்’’
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை ஊராட்சிக்குட்பட்ட மேலபாறைப்பட்டி கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 4 நாள்களாக அக்கிராம மக்கள் கிராமத்தினை விட்டு வெளியேற முடியமால் பரிதவித்து வருகின்றனர். இருப்பினும் அவரசத் தேவைகளுக்காக கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆபத்தான நிலையில் பாலத்தின் சுவற்றில் நடந்தும், நீச்சல் அடித்தும் பயணிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேலபாறைப்பட்டி. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்;. இப்பகுதி மக்கள் மருத்துவம், கல்வி, வேலை என எல்லாவற்றுக்கும் கோவில்பட்டி, கடம்பூர், குருமலை பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும், இக்கிராமத்திற்கும் கிழபாறைப்பட்டிக்கு இடையே உள்ள ரயில்வே தண்வாளத்தின் பகுதியில் ரயில்வே கேட் இருந்தது. இரட்டை ரெயில் பாதை அமைக்கும் போது, அந்த ரெயில்வே கேட்ட அகற்றப்பட்டு ரெயில்வே சுரங்கபாலம் அமைக்கப்பட்டது. ரெயில்வே சுரங்காபாலம் அமைக்கும் போது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கிவிடும் நிலை உள்ளதால் மாற்று பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடம்பூர் மற்றும் சுற்றவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மேலபாறைப்பட்டி ரயில்வே சுரங்கபாலம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. மேலபாறைப்பட்டியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல வேறு எதுவும் வழியில்லை என்பதால் அப்பகுதி மக்கள் கடந்த 4 நாள்களாக கிராமத்தினை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். பால்,காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருள்கள் வாங்க குருமலைக்கு தான் செல்ல வேண்டும், மேலும் ரேஷன் பொருள்கள் வாங்க அருகில் உள்ள வெங்கடாசலபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பொது மக்கள் வெளியேற முடியமால் பரிதவித்து வருகின்றனர்.
மேலும் கிராமத்திலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படும் சூழ்நிலை உள்ளது. கிராமத்தில் உள்ளேயும் தண்ணீர், கிராமத்தினை சுற்றியும் தண்ணீர், கிராமத்தினை விட்டு வெளியேறும் பாதையிலும் தண்ணீர் என்பதால் அக்கிராம மக்கள் கிராமத்தில் முடங்கி போய் உள்ளனர். மாற்றுபாதை இல்லை என்பதால் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. சுரங்கபாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற ரயில்வே நிர்வாகம் மோட்டர்கள் வைத்து வெளியேற்றினாலும், தண்ணீர் குறைந்தபாடு இல்லை, 21 அடி வரை தேங்கி இருந்த மழைநீர் கடந்த 2 நாள்களாக மோட்டர் வைத்து வெளியேற்றியதால் 3 அடி மட்டும் தான் குறைந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் சுரங்கபாலத்தில் தண்ணீர் அதிகரிக்கும் நிலை உள்ளது. வேறு வழியில்லை என்பதால் பொது மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் சுரங்கபாலத்தின் மேல் சுவர் மேல் ஆபத்தான நிலையில் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்லககூடியவர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்து செல்கின்றனர். கடந்த 4 நாள்களாக ஊரை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் தங்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியேற முடியமால் பரிதவித்து வருவதாகவும், அவசர மருத்துவ உதவிக்கூட செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், வரும் நாள்களில் பள்ளிகள் வேறு திறந்துவிடும் என்பதால் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றுவது மட்டுமின்றி, மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பு இல்லமால் இருக்கும் வகையில் மாற்று பாதை ஏற்படுத்த வேண்டும், கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது வரை அதிகாரிகள் தங்களது கிராமத்தினை கண்டுகொள்ளவில்லை என்றும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆதார் அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.