விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
இறந்து போனவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை மட்டுமே நீக்குகிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியான திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் செல்கிறது - நயினார் நாகேந்திரன்

விழுப்புரம்: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" என்ற யாத்திரை, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
போலி வாக்காளர்கள் நீக்கம் - திமுக ஏன் பயப்படுகிறது?
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசிய அவர்: "தமிழகத்தில் 2002-ம் ஆண்டிலேயே இறந்து போனவர்கள் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உயிரோடு உள்ளனர். மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இத்தகைய போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. இறந்து போனவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை மட்டுமே நீக்குகிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியான திமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் செல்கிறது.
ஏற்கனவே சேர்த்துள்ள கள்ள ஓட்டுகள் நீக்கப்படுவதால் திமுக பயப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியிலேயே ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்றால், அவர் தவறான வாக்குகளைக் கொண்டுதான் வெற்றி பெற்றாரா? என்ற கேள்வி எழுகிறது. 18 வயது நிரம்பியவர்களைச் சேர்ப்பதிலும், இறந்தவர்களை நீக்குவதிலும் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் குறித்து 'அய்யோ பாவம்' விமர்சனம்:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி" என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது: "ஐயோ பாவம்! தம்பி விஜய் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதற்குள் இப்படியெல்லாம் பேசுகிறார். அவருக்குத் துணையாகச் சென்றுள்ள அண்ணன் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்தது போலவே இப்போதும் ஏதோ செய்து கொண்டிருக்கிறார். பாவம் அவருக்கு வேறு வழி தெரியவில்லை" என்று கிண்டலாகப் பதிலளித்தார்.
ஊடகங்களைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கும் திமுக
திமுகவின் வெற்றி குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்: "1967-க்குப் பிறகு திமுக என்றைக்கும் மக்கள் செல்வாக்கைப் பெற்று வெற்றி பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் உயிரோடு இருக்கும் வரை அவர்தான் முதல்வராக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததால் மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த தேர்தலில் கூட சிறிய கணக்குத் தவறுதலால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
தற்போது ரூ.50,000 கோடிக்கு மேல் கொள்ளையடித்து வைத்துள்ள திமுக, ஊடகங்களைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைப் பரப்பி வருகிறது. ஆனால், வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்





















