![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு
குடிபோதையில் மிளாவைக் கொலை செய்த, வனத்துறையினர் மீது வன விலங்குகளை கொலை செய்தல் குற்றச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
![உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு thoothukudi: Mila, who died in udangudi- may have had a heart attack- District Forest Officer TNN உடன்குடியில் வனத்துறையினர் அலட்சியத்தால் மிளா இறந்ததா..? - பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/71ccb6a56b4c10dda50c2d401fc3286d1669627467176109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி கீழ பஜாரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிளா ஒன்று நேற்று இரவு புகுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மிளாவை மீட்டு செல்வதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வராததால் திருச்செந்தூர் தீயணைப்பு துறையினரிடம் கயிறு வாங்கினர்.
பின்னர் அந்த கயிற்றில் சுருக்கு வைத்து மிளா கழுத்தில் மாட்டி பிடிக்க முயன்றனர். அப்போது மிளா பயத்தில் அங்கும் இங்கும் ஓட முயன்றது. இதில் கழுத்தில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியது. பின்னர் மிளாவை வனத்துறையினர் மீட்டு திருச்செந்தூர் வன சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மிளா கயிறு இறுகியதில் இறந்ததாக கூறப்படுகிறது. வனத்துறையினர் மிளாவை பிடிப்பதற்கு எந்த ஒரு உபகரணமும் கொண்டு வராமல் கயிறு மூலம் பிடித்ததில் கழுத்து இறுகி மூச்சுத்திணறி இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து திருச்செந்தூர் வனசரக அலுவலர் கனிமொழியிடம் கேட்டபோது, மிளா ஒரு மான் வகையைச் சேர்ந்தது இது பொதுமக்களும் மற்றும் மற்ற விலங்கினங்களை பார்த்தால் மிரண்டு ஓடக்கூடியதாகும். இதனால் அது மிரண்டு பயந்த நிலையில் இருந்தது. இன்று அந்த மிளா உயிரிழந்து விட்டது. பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய உள்ளோம் என தெரிவித்தார். தற்போது வனத்துறையினர் கயிறு மூலம் மிளாவை பிடித்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமரிடம் கேட்டபோது, மிளா மான் மிகவும் சென்சிட்டிவானது, ஊருக்குள் வந்த தகவல் கிடைத்தவுடன் வன அலுவலர்கள் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களை கண்டவுடன் அச்சத்தில் மானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அவர், வனத்துறையினர் கழுத்தில் கயிறு கொண்டு பிடித்ததாக கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும், உயிரிழந்த மானின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதனடிப்படையில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலரான குணசீலம் வேலனிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையம் அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த மான் வகையைச் சார்ந்த சாம்பார் மான் எனும் மிளா ஒன்று, வழிதவறி நேற்று இரவு சுமார் எட்டுமணி அளவில், உடன்குடி கீழபஜாரில் உள்ள காம்ப்ளக்ஸ்குள் வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில்,இரவு சுமார் ஒருமணியளவில் மானை பிடிக்க குடிபோதையில் வந்த வனத்துறையினர், மிகச் சாதாரணமாக பிடிக்கக்காமல் குறைந்தபட்சம் வலையை பயன்படுத்தியாவது பிடிக்காமல், சுருக்குக் கயிற்றைப் பயன்படுத்தி மிளாவின் கழுத்தில் மாட்டச்செய்து, கயிற்றை இழுத்து அநியாயமாகக் கொலை செய்தனர்.
மதுபோதையில் மிளாவைக் கொலை செய்த, சம்பந்தப்பட்ட வனத்துறையினரை வன்மையாகக் கண்டிப்போம். இந்த கொடூரச் செயலைச் செய்த, பணியின்போது மதுபோதையில் இருந்த சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது, வன விலங்குகளைக் கொலை செய்தல் குற்றச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தும், அவர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)