தென்காசி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தைகளுடன் பெண் தர்ணா
பாவூர்சத்திரத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தைகளுடன் இரவில் பெண் ஒருவர் தர்ணா செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தூத்துக்குடி மாவட்டம் கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகள் பபிதா (வயது 39), பாவூர்சத்திரம் குருசாமிபுரம் முத்து என்பவர் மகன் சக்திவேல் (வயது 39). இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்சமயம் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்கள். இந்த சூழலில் இவர்கள் இருவரும் மேட்ரிமோனி மூலம் சுயவிபரம் தெரிந்து பெரியவர்கள் முன்னிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. இவர்களுக்கு ஒன்றரை வயது மற்றும் 5 மாத கை குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் பபிதாவுடன் சக்திவேல் தனது தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு அவரை பார்க்க கூட செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பபிதாவை விவாகரத்து செய்வதற்காக வக்கீல் மூலம் ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பபிதா நேற்று இரவு பாவூர்சத்திரம் ரயில்வே கேட் மேல்புறம் அமைந்துள்ள சக்திவேலின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் சக்திவேலின் பெற்றோர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களும் பபிதாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டின் கேட்டை பூட்டி உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த பபிதா அதே வீட்டின் முன்பு தனது இரு குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் பபிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது , “நான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால் அவர் என்னை ஏற்க மறுக்கின்றார். இதனால் வேறு வழியின்றி வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். பின்பு சிறிது நேரத்தில் சக்திவேல் தரப்பில் வந்த வழக்கறிஞர்கள் அவர் முறைப்படி விவாகரத்து மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதனால் கண்ணீர் மல்க குழந்தைகளுடன் இரவில் நின்றுக் கொண்டிருந்த பபிதாவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தென்காசி அருகே உள்ள காப்பகம் ஒன்றில் கொண்டு சேர்த்தனர். இச்சம்பவத்தால் பாவூர்சத்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.