தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
ஸ்மார் மீட்டர்களை வாங்கும் டெண்டரை ரத்து செய்திருப்பதால் தமிழக அரசுக்கு மொத்தம் 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஸ்மார் மீட்டர்களை வாங்கும் டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ரத்து செய்ததால் தமிழக அரசுக்கு 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டெண்டரை ரத்து செய்திருப்பதால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கூடுதலாக 0.5 சதவிகிதம் கடன் வாங்குவது தடைப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடி மின் நுகர்வோரின் தேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து ஸ்மார் மீட்டர் அமைக்கும் திட்டத்தை ரூ19,000 கோடி மதிப்பீட்டில் செயல்ப்படுத்துகிறது.
அதானி டெண்டர் ரத்தின் பின்னணி:
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகம் என்ற இந்த திட்டத்தில் சேர்வதன் மூலம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 0.5 சதவிகிதத்தை கடனாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் பெற்று கொள்ளலாம். அதோடு, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒரு மீட்டருக்கு சராசரியாக 900 ரூபாயை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் முதல் தொகுப்புக்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த விலையை குறிப்பிட்டு இருந்தது. எனவே, இந்த ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
ஆனால், இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், தேசிய அளவில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த டெண்டரை ரத்து செய்தது TANGEDCO.
தமிழக அரசுக்கு இழப்பு:
குறைவான தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தாலும் அந்த தொகை மின்சார வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்மார் மீட்டர்களை வாங்கும் டெண்டரை ரத்து செய்திருப்பதால் தமிழக அரசுக்கு மொத்தம் 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் இலக்குகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய 30,000 கோடி ரூபாயை தமிழக அரசு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதை தவிர, மத்திய அரசின் திட்டத்தின் நிறைவேற்றினால் மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட நிதி உதவி வழங்கப்படும். அந்த வகையில், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், டெண்டரை ரத்து செய்திருப்பதால் அந்த தொகையும் கடனாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!