வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.46 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்
கட்டிட வரைபட அனுமதிக்காக லஞ்சம் பெற்ற ஊராட்சிமன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக சத்தியராஜ் என்பவர் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் கொல்லத்தை சேர்ந்த ரஜனீஸ் பாபு என்பவரின் அத்தை மகள் வந்தனா என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்காக குத்துக்கல் வலசை அருகே ராஜாநகர் பகுதியில் 23 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர் ரஜனீஸ் பாபு. இதற்காக ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட கட்டிட வரைபட அனுமதிக்காக அரசுக்கு 59,290 ரூபாய் கட்ட வேண்டி உள்ளது. அந்த மொத்த எஸ்டிமேட்டில் 2% அதாவது தனக்கு 46000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரஜனீஸ் பாபு இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்க முடிவெடுத்தார்.
அதன்படி, புகாரளித்த ரஜனீஸ் பாபுவிடம் தென்காசி லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கூறிய அறிவுரையின் பேரில் இரசாயனம் தடவிய 46,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட ரஜனீஸ் பாபு பேரம் பேசிய ஊராட்சிமன்ற தலைவர் சத்தியராஜிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு 6000 ரூபாயை சத்தியராஜ் திருப்பி கொடுத்துள்ளார். இதனை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை லஞ்சம் பெற்ற ஊராட்சிமன்ற தலைவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி பால் சுந்தர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, எஸ்ஐ ரவி உள்ளிட்ட குழுவினர் பிடிபட்ட ஊராட்சி தலைவர் சத்தியராஜையும், அவருக்கு உதவியாக இருந்த ஒப்பந்தக்காரர் சொளந்தராஜ் என்பவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். கட்டிட வரைபட அனுமதிக்காக லஞ்சம் பெற்ற ஊராட்சிமன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.