நெல்லை சாப்டர் பள்ளி நிர்வாகத்திற்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்டனம்
'விபத்து நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த 3 உடற்கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பி அடுத்த கட்ட விசாரணையை துவக்கினர்'
கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுன் பகுதியில் இயங்கி வரும் சாப்டர் பள்ளியில் இடைவேளையின் போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் கழிப்பறை சுவரின் அடித்தளம் சரியாக இல்லாதததே என பலரும் குற்றம் சாட்டினர், மேலும் இது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வரும் சூழலில் தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதே போல பள்ளியின் உறுதித்தன்மை குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் இருந்த தலைமை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று நெல்லை நீதிமன்ற (பொ) நீதிபதி தீபா உத்தரவிட்டு இருந்தார், இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு நேற்றைய தினம் எடுத்தது. இதனை தொடர்ந்து நெல்லையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெயசந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்து விசாராணையை தொடங்கினார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார், பின்னர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த அவரிடம் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் விரைவான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர், அவர்களிடம் தனது ஆறுதலை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஓய்வுபெற்ற நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறுகையில், நெல்லையில் நடைபெற்ற பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் இந்த விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி உள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர், இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளது. நடந்த சம்பவத்திற்கு வருத்தம் கூட தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
இந்த விபத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது மாநில மனித உரிமை ஆணைய கவனத்திற்கு இந்த சம்பவம் வந்த நிலையில் தமிழக அரசு இந்த விபத்து தொடர்பாக விரைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கும் காயம்பட்டவர்கள் குடும்பத்திற்கும் இழப்பீடு அறிவித்துள்ளது. எந்தவிதமான அடித்தளம் இல்லாமல் சுவர் கட்டப்பட்டுள்ளது தான் விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது எனவும் கூறினார்.
இது குறித்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூறும் பொழுது, எங்கள் பிள்ளைகள் உயிரிழந்ததற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என அரசை நம்பி இருந்தோம், ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் வெளியே வந்துவிட்டனர். இந்த விசயத்தில் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து நடந்த உடனே மற்ற மாணவர்கள் தூக்க சென்று உள்ளனர். ஆனால் அவர்களை தடுத்து ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் நினைத்து இருந்தால் அங்கிருந்த காரில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம், தற்போது மனித உரிமை ஆணையம் கையில் எடுத்து உள்ளது. விரையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் எங்கள் குழந்தைகள் ஆன்மா சாந்தியடையும் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.
தற்போது இந்த வழக்கில் காவல்துறையினரின் அடுத்த கட்ட விசாரணையானது இன்று துவங்கி உள்ளது. விபத்து நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த 3 உடற்கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பறை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொழில் நுட்ப ரீதியான விசாரணையும் நடந்து வருவதோடு கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறபட்டு வருகிறது.