நெல்லை: கடும் வறட்சியை நோக்கி பாபநாசம் அணை...! விரைவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம்..!
தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமான தாமிரபரணி நதி வறட்சியை நோக்கி பயணமாகி கொண்டிருப்பது தென் மாவட்ட மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 88,407 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதோடு மட்டுமின்றி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவ மழை மூலம் கார் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை மூலம் பிசான சாகுபடியும் என இரண்டு போக விளைச்சல் முழுமையாக நடைபெறும். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடும் வறட்சியை சந்தித்துள்ளது. தாமிரபரணியின் பிரதான நீர் ஆதாரங்களான பாபநாசம், சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காண்பிக்கப்படுகிறது. அதேபோன்று அதனுடைய கிளை ஆறுகள் ஆன ராமநதி, கடனாநதி உள்ளிட்ட அணைகளும் வறட்சியை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட வெகு குறைவாகவே மழை அளவு கிடைக்கப்பெற்றதன் காரணமாக பிரதான அணைகளில் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 15.45 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும் குறைந்த அளவு மட்டுமே தண்ணீரும் மற்றபடி சேரும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் 38.06 அடியும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 72.75 அடியும் நீர் இருப்பு உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர் வரத்து குறைந்ததால் இன்னும் மீதம் இருக்கும் கோடை காலத்திற்குள் அணை முற்றிலுமாக வறட்சி நிலைக்கு சென்று விடும் சூழல் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. தாமிரபரணி நதியானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் குறைந்து ஓடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் தாமிரபரணி நதியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போல் வெயிலின் தாக்கமும் இந்தாண்டு அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு வறட்சியை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தாமிரபரணி நதியிலிருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தின் தென் பகுதிகள் என்று பல்வேறு பகுதிகளுக்கும் தாமிரபரணி நதியிலிருந்து சிறப்பு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தாமிரபரணி நதியில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து இருப்பதால் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கான நீர் உந்தும நிலையங்கள் தண்ணீர் எடுப்பது சற்று கடினமான ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமான தாமிரபரணி நதி வறட்சியை நோக்கி பயணமாகி கொண்டிருப்பது தென் மாவட்ட மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..