(Source: ECI/ABP News/ABP Majha)
மாவட்ட தலைவரை மாற்றக்கோரி நெல்லையில் மகளிர் காங்கிரஸ் கருப்பு சேலை அணிந்து போராட்டம்
திருநெல்வேலியில் மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் கருப்பு சேலை அணிந்து போராட்டம் நடத்தினர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வருவதால் பல்வேறு பிரச்சனைகளும் நடந்து வருகிறது.
கருப்பு சேலை ஆர்ப்பாட்டம்:
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் மகளிர் காங்கிரஸ் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற கோரியும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி. கே.ஜெயக்குமாரை மாற்ற கோரியும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலை முன்பு கருப்பு சேலையுடன் மகளிர் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அழகிரியை கண்டித்தும், மாவட்ட தலைவரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கருப்பு கொடிகளுடன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலக வாசலில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
முறைகேடுகள்:
இதுகுறித்து மாநில இணைச்செயலாளர் கமலா கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கிட செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைக்கப்பட்ட போதிலும், எங்களை மதிக்காமல் எங்களை இழிவுபடுத்தும் நோக்கில் மாநிலத் தலைவரும், மாவட்டத் தலைவரும் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பூத்கமிட்டி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரிடம் எந்த ஒரு ஆலோசனையும் பெறாமல் இதுபோன்ற சம்பவங்களில் மாவட்ட தலைவர் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநிலத் தலைவர் அழகிரி செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி பிரதமராக கூடாது என்ற நோக்கில் செயல்படும் அழகிரியை உடனடியாக மாற்ற வேண்டும். மாவட்டத் தலைவரையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக மாநிலத்தலைவர் அழகிரி மீது வெடிகுண்டு வீசுவோம் என்பது போன்ற வாசகங்களுடன் whatsapp-இல் செய்தி பரப்பிய நாங்குநேரி காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவருக்கு எதிராக மகளிர் அமைப்பினர் கருப்பு சேலை கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,