பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவு
அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 காவலர்களை மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு பணிகளை மாற்றம் செய்து எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்த சம்பவத்தில் இதுவரை சுபாஷ், அருண்குமார், வேத நாராயணன் மற்றும் சூர்யா என பாதிக்கப்பட்ட நான்கு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவு செய்து உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வேறு சிங் மற்றும் சில காவலர்கள் என பெயர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது நான்குக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுகள் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் அருண்குமார் மற்றும் வேதநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ASP பல்வீர்சிங்கின் பாதுகாப்பு போலீசார் ( gunman) இசக்கி முத்து, சதாம் உசேன் மற்றும் அவரது ஓட்டுநர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி ( Ociu) துணை கண்காணிப்பாளர் சங்கர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் தொடர்புடைய 30 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும் சி பி சி ஐ டி டிஎஸ்பி சங்கர் தெரிவித்துள்ளார். வழக்கில் விசாரணை ஒரு புறம் தீவிரமடைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 24 காவலர்களை மாவட்டத்தின் பிற காவல் நிலையங்களுக்கு பணிகளை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் சிபிசிஐடி காவல் துறையால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் முருகேசன், காவலர்கள் விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியல், ஆயுதப்படை என நடவடிக்கைக்கு உள்ளான காவலர்களும் இதர காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். எனினும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கமான பணியிடை மாற்ற நடவடிக்கை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வழக்கில் சேர்க்கப்பட்ட காவலர்கள் உட்பட 24 பேர் வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்