Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என்ற, இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Donald Trump: திருநங்கைகளுக்கு எதிரான சட்டத்தில் முதல் நாளே முதல் கையெழுத்திட உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் அதிபராக பதவியேற்க உள்ள முதல் நாளிலேயே "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவோம்" என்று பேசியுள்ளார். ஃபீனிக்ஸ், அரிசோனாவில் இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்வில் பேசிய டிரம்ப், “குழந்தைகள் இடையேயான பாலியல் சிதைவை நிறுத்தவும் , திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், எங்கள் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றுவேன். பெண்களின் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பேன். ண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும். இதற்கான நிர்வாக உத்தரவுகளில் முதல் நாளே கையெழுத்திடுவேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
”பனாமா கால்வாய் உரிமை”
தொடர்ந்து, “புலம்பெயர்ந்த குற்றங்களுக்கு" எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதைப்பொருள் விற்பனையாளர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்படுவர். அமெரிக்க மண்ணில் செயல்படும் இந்த குற்றவியல் வலையமைப்புகள் அகற்றப்பட்டு, நாடு கடத்தப்படும் மற்றும் அழிக்கப்படும் . கால்வாயின் முழுக் கட்டுப்பாட்டையும் பனாமாவுக்கு வழங்கிய 1970 ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால், அதை "முழுமையாகவும், விரைவாகவும், கேள்வியின்றியும்" அமெரிக்காவிடம் திருப்பித் தருமாறு கோருவோம்” என ட்ரம்ப் பேசினார்.
Under the Trump administration, it will be the official policy of the United States Government that there are only two genders: MALE and FEMALE. pic.twitter.com/aAYz53twXM
— Trump War Room (@TrumpWarRoom) December 22, 2024
”அமெரிக்காவின் பொற்காலம்”
நாட்டின் வளர்ச்சி குறித்து பேசிய ட்ரம்ப், “ஜனவரி 20 அன்று, அமெரிக்கா நான்கு நீண்ட, பயங்கரமான தோல்விகள், திறமையின்மை, தேசிய வீழ்ச்சி ஆகியவற்றின் பக்கங்களை மொத்தமாக மாற்றும். அமைதி, செழிப்பு மற்றும் தேசிய மகத்துவத்தின் புதிய சகாப்தத்தை நாங்கள் திறப்போம். நான் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், மூன்றாம் உலகப் போரைத் தடுப்பேன், நான் உறுதியளிக்கிறேன். அமெரிக்காவின் பொற்காலம் நம்மீது உள்ளது" என சூளுரைத்தார்.
அமெரிக்க அரசு தீவிரம்:
இருப்பினு, உக்ரைனில் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது அல்லது மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட எவ்வாறு திட்டமிட்டுள்ளார் என்பதை இன்னும் பகிரங்கமாக விளக்கவில்லை. இதனிடையே, கடந்த வாரம், அமெரிக்க காங்கிரஸ் தனது வருடாந்திர பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தது. அதில் பாதுகாப்பு படையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளின் பாலினத்தை உறுதிப்படுத்தும் சில பராமரிப்புக்கான நிதியுதவியைத் தடுப்பதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்புகளும், அரசின் நடவடிக்கைகளும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருநங்கைகளின் உரிமைகள் பறிக்கபடுவதாக, ட்ரம்புக்கு எதிராக ஒரு தரப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.