"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
மற்றவர்களுக்காக பல உரிமைகளைப் பெற்றுத் தந்தது பிராமண சமூகம் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் பேசியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தில் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் 45வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கும்பகோண எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான அன்பழகன் பங்கேற்றார்.
உரிமைகளைப் பெற்றுத் தந்தது பிராமண சமூகம்
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "எனக்கு இந்த மேடைதான் முதல் சமூக மேடை. நான் எந்த சமூகத்தையும் சார்ந்தவன் இல்லை என்பதால்தான், கும்பகோணம் மக்கள் என்னை 3வது முறையாக தேர்வு செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி நான் களத்தில் இருந்தாலும், அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவன் நான். இந்த பிராமண சமூகம் பல உரிமைகளை மற்றவர்களுக்காக பெற்றுத் தந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கும்பாபிஷேகமும், பூஜைகளும் கோயில்களில் நடைபெறாது என்று சொன்னார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க. பிராமணர்களுக்கு எதிரானது அல்ல"
இவ்வாறு அவர் பேசினார். அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. தி.மு.க. அரசு பிராமணர்களுக்கு எதிரானது என்றும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் முறையாக பூஜைகள் நடக்காது என்றும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பலரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
குடமுழுக்கு விழா:
தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான கோயில்களில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கோயில்களின் நலனுக்காக பல கோடிகள் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அனைவருக்குமானது என்றும் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. அரசு பிராமணர்களுக்கு எதிரானது இல்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது மட்டுமின்றி, மற்றவர்களுக்காக பல உரிமைகளை பிராமண சமூகத்தினரே பெற்றுத் தந்துள்ளனர் என்று பேசியிருப்பதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.